வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டம்

ஊட்டியில் புதிதாக திறக்கப்பட்ட கோர்ட்டில் அடிப்படை வசதிகள் இல்லை என்றுக்கூறி வக்கீல்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-01-26 18:45 GMT

ஊட்டி

ஊட்டியில் புதிதாக திறக்கப்பட்ட கோர்ட்டில் அடிப்படை வசதிகள் இல்லை என்றுக்கூறி வக்கீல்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம்

ஊட்டி கலெக்டர் அலுவலகம் அருகே மாவட்ட அமர்வு நீதிமன்றம் மற்றும் விரைவு மகளிர் நீதிமன்றம் உள்ளிட்ட கோர்ட்டு கட்டிடங்கள் உள்ளன. மேலும் ஒருசில கோர்ட்டுகள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகின்றன.

இந்தநிலையில் பழங்கால கட்டிடத்தில் இயங்கி வருவதாலும், போதுமான இடம் இல்லாததாலும், கோர்ட்டுகள் வாடகை கட்டிடத்தில் இயங்குவதை நிறுத்தும் வகையிலும் ஊட்டி பிங்கர்போஸ்ட் அடுத்த காக்கா தோப்பு பகுதியில் ரூ.33 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் கட்டப்பட்டு உள்ளது.

சுமார் 3½ ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம், விரைவு மகளிர் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம் உள்பட 8 கோர்ட்டுகள் இயங்க உள்ளன. மேலும் நூலகம், தாய்மார்கள் பாலூட்டும் அறை உள்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. போதுமான இடவசதி இருப்பதால் தேவைப்பட்டால் கூடுதல் கோர்ட்டுகள் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனாலும் சாலை உள்ளிட்ட ஒருசில அடிப்படை இல்லை.

உண்ணாவிரத போராட்டம்

இதற்கிடையில் மாவட்ட நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் புதிய நீதிமன்ற வளாகத்தில் செயல்பட தொடங்கும் என்று நீதிமன்ற நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த வக்கீல்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பழைய கோர்ட்டு வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். வக்கீல்கள் சங்க தலைவர் சந்திரபோஸ் தலைமை தாங்கினார். மூத்த வக்கீல்கள் அனந்தகிருஷ்ணன், நாராயண குட்டி, விஜயன், குன்னூர் வக்கீல்கள் சங்க தலைவர் ராமச்சந்திரன், கோத்தகிரி வக்கீல்கள் சங்க தலைவர் குயில் அரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்இதுகுறித்து வக்கீல்கள் கூறும்போது, புதிய கோர்ட்டில் இதுவரை சாலை வசதிகள் முழுமையாக ஏற்படுத்தப்படவில்லை. மேலும் கழிப்பறைகளுக்கு தண்ணீர் வசதியும் செய்யவில்லை. பொதுமக்களுக்கு தேவையான எந்த ஒரு அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்படவில்லை. எனவே இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அதன்பிறகே இடமாற்றம் செய்ய வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்