தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மோசமாக உள்ளது என்று சேலத்தில் பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
நினைவு அஞ்சலி
சேலத்தில் பா.ஜ.க. முன்னாள் மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேசின் 10-ம் ஆண்டு நினைவு அஞ்சலி கூட்டம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சேலம் மரவனேரி பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்டு 10 ஆண்டுகள் ஆகியும் குற்றவாளிகள் இன்னும் தண்டிக்கப்படவில்லை. இது கண்டனத்திற்குரியது. இந்த விஷயத்தில் தமிழக காவல்துறை சரியாக செயல்படவில்லை. எனவே ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் விரைவில் கொலையாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
சட்டம், ஒழுங்கு மோசம்
செந்தில்பாலாஜியை தொடர்ந்து அமைச்சர் பொன்முடியும் அமலாக்கத்துறையின் பிடியில் சிக்குவார் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தேன். அவர் மீது ஏற்கனவே அமலாக்கத்துறையிடம் வழக்கு நிலுவையில் உள்ளது. அதன்பேரில் தான் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அமைச்சர் பொன்முடி வீட்டில் அரசியல் காரணத்திற்காக அமலாக்கத்துறை சோதனை செய்யவில்லை. அவர்களுக்கு கிடைத்த தகவலின்படி அந்த சோதனை நடத்தப்பட்டது.
தமிழகத்தில் அரசியல் கொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கிராம நிர்வாக அலுவலர் உள்பட பலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதை பார்க்கும் போது, தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மிக மோசமாக உள்ளதை காட்டுகிறது.
இதேபோல், அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் மீதும் அமலாக்கத்துறையில் வழக்குகள் உள்ளன. இதனால் அமலாக்கத்துறை விசாரணையில் அடுத்து சிக்குவது யார்? என்பது விரைவில் தெரியும். அதேபோல், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளிலும் தகுந்த நேரத்தில் அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொள்ளும்.
இவ்வாறு அவர் கூறினார்.