தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து, வளர்ச்சி பின்னோக்கி செல்கிறது - ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து, வளர்ச்சி பின்னோக்கி செல்கிறது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.;

Update:2022-05-31 22:54 IST

சென்னை,

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டுமென்றால், இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்க வேண்டுமென்றால், தொழில் வளர்ச்சியில் தமிழகம் சிறந்த மாநிலமாக உருவாக வேண்டுமென்றால், அதற்கு அடிப்படைத் தேவையாக விளங்குவது சட்டம்-ஒழுங்கு. ஒரு மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது என்றால், அந்த மாநிலத்தின் வளர்ச்சி பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதுதான் அதன் பொருள்.

அந்த வகையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து, அதன் வளர்ச்சி பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. சூதாட்டம், சாராயம், போதை, கடத்தல், பதுக்கல் ஆகியவற்றின் புகலிடமாக தமிழகம் விளங்கிக் கொண்டிருக்கிறது. தமிழக முதல்-அமைச்சரோ 'திராவிட மாடல்' ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று சொல்கிறார்.

ஆனால், தமிழகத்தில் நாள்தோறும், வெட்டுக் குத்து, கொலை, தற்கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல் போன்ற சம்பவங்கள் தான் அதிகம் நடைபெற்று வருகின்றன. ஒருவேளை இதுதான் 'திராவிட மாடல்' போலும்.

நடு ரோட்டில் அரிவாளால் வெட்டுதல், பட்டப் பகலில் அரிவாளால் சரமாரியாகத் தாக்குதல் என்பதையெல்லாம் தாண்டி, அரசு அலுவலகத்திலேயே வெட்டுக் குத்துச் சம்பவம் தமிழகத்தில் நேற்று அரங்கேறி இருக்கிறது என்றால், அந்த அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீரழிந்திருக்கிறது.

இதிலிருந்து, திமுக ஆட்சியில் ஒழுக்கமின்மை மேலோங்கி நிற்கிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது. திமுகவினருக்கு பயந்து கொண்டிருந்த அரசு அதிகாரிகள் இனி சக ஊழியர்களுக்கும் அஞ்சி நடக்க வேண்டிய நிலை தற்போது தமிழகத்தில் உருவாகியுள்ளது. ஆட்சி அதிகாரத்தில் திமுகவினரின் தலையீடு பரவலாக இருப்பதும், அவர்களோடு சில அரசு ஊழியர்கள் கைகோர்த்து இருப்பதும்தான் இதுபோன்ற செயலுக்கு காரணம் என்று அரசு ஊழியர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்த நிலை நீடித்தால், அரசு அலுவலகங்களுக்கு செல்லும் பொதுமக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும் நிலை உருவாகும். அரசு அலுவலகங்களுக்குள் செல்பவர்களை எல்லாம் பரிசோதனை செய்து அனுப்ப வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. ஆட்சியாளர்களின் நிர்வாகத் திறமையின்மைதான் இதுபோன்ற விபரீதங்களுக்கு காரணம். இது கடும் கண்டனத்திற்குரியது.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அரசு அதிகாரி விரைவில் பூரண குணமடைந்து மீண்டும் பணியில் சேர வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக முதல்-அமைச்சர் மற்ற பிரச்சினைகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு, மாநிலத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கும் சட்டம் ஒழுங்கினை பராமரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், திட்ட அதிகாரியை தாக்கிய இளநிலை உதவியாளர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனையை பெற்றுத் தர வேண்டும் என்றும் அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்