சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. தமிழகத்தில் உள்ள அம்மன் கோவில்களில் பவுர்ணமியையொட்டி திருவிளக்கு பூஜை நடத்த வேண்டும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. அதன்படி நேற்று முன்தினம் பவுர்ணமியையொட்டி இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திருவிளக்குபூஜையை தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து பண்ணாரி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி அங்குள்ள ஒரு மேடையில் பண்ணாரி அம்மன் உற்சவ சிலை வைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் பண்ணாரி அம்மன் கோவில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. இதில் 108 பெண்கள் கலந்து கொண்டார்கள்.
இவர்களுக்கு கோவில் சார்பில் பித்தளை காமாட்சி அம்மன் விளக்கு, குங்குமச்சிமிழ், புடவை, மஞ்சள் பாக்கெட், குங்குமம், கற்பூரம், வெற்றிலை பாக்கு, தேங்காய் பழம், எலுமிச்சைபழம், பூக்கள் உள்ளிட்ட 22 பொருட்கள் ரூபாய் 800 மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் அறநிலையத்துறை ஈரோடு இணை ஆணையர் பரஞ்சோதி, கோவிலின் துணை ஆணையர் மேனகா, பவானிசாகர் தொகுதி ஏ.பண்ணாரி எம்.எல்.ஏ., ஈரோடு மாவட்ட தி.மு.க. செயலாளர் நல்லசிவம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் கே.சி.பி.இளங்கோ, சத்தியமங்கலம் நகராட்சி தலைவர் ஆர்.ஜானகி ராமசாமி, ஒன்றிய செயலாளர் தேவராஜ், வக்கீல் பார்த்திபன், சிக்கரசம்பாளையம் ஊராட்சி தலைவர் சுப்பிரமணியன் மற்றும் அறங்காவலர்கள் கலந்து கொண்டார்கள்.