பேரம்பாக்கத்தில் சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைத்து தர வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
பேரம்பாக்கத்தில் சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் முதல் நிலை ஊராட்சியில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். பேரம்பாக்கம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே கூவம் ஆறு உள்ளது. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் கூவம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தரைப்பாலத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது. இதனால் இந்த தரைப்பாலத்தை யாரும் பயன்படுத்த முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இருளஞ்சேரி, கூவம், குமாரச்சேரி, நரசிங்கபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பேரம்பாக்கத்திற்கு வந்து செல்லவும், பேரம்பாக்கத்தில் இருந்து நரசிங்கபுரம் போன்ற பகுதிகளுக்கு செல்ல மக்கள் இந்த தரைபாலத்தையே பயன்படுத்தி வந்தனர். தரைப்பாலம் சேதமடைந்ததால் சமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுற்றிக்கொண்டு புதிய மேம்பாலத்தின் வழியாக செல்ல வேண்டியுள்ளது.
இதனால் இருளஞ்சேரி, கூவம், குமாரச்சேரி, நரசிங்கபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்த பேரம்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் அவதியுற்று வருகின்றனர்.
எனவே பேரம்பாக்கம் முதல்நிலை ஊராட்சியில் கூவம் ஆற்றில் சேதமான தரைப்பாலத்தை அதிகாரிகள் சீரமைத்து வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.