வடபழனி முருகன் கோவிலுக்குச் சொந்தமான நிலம்: அளவீடு செய்ய தாசில்தாருக்கு ஐகோர்ட் உத்தரவு...!

வடபழனி முருகன் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தை அளவீடு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாம்பலம் தாசில்தாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;

Update:2023-04-14 19:42 IST

சென்னை,

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, வடபழனி ஆண்டவர் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தை அளவீடு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாம்பலம் தாசில்தாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை வடபழனி முருகன் திருக்கோயிலுக்குச் சொந்தமாக சென்னையில் பல இடங்களில் நிலங்கள் உள்ளன. அந்த வகையில் சாலிகிராமம் வீரமாமுனிவர் தெருவில் உள்ள ஒரு ஏக்கர் 92 செண்ட் நிலத்தை அளவீடு செய்ய மாநகராட்சி மற்றும் மாம்பலம் தாசில்தாரருக்கு உத்தரவிடக் கோரி கோவில் துணை ஆணையர் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் 2016ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது.

அந்த மனுவில், "கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் ஒரு பகுதி சாலை அமைப்பதற்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த சாலையை அளவீடு செய்து எல்லை வரையறை செய்ய வேண்டும். நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனக்கூறி மாம்பலம் தாசில்தாரர், கோவில் நிர்வாகம், மற்றும் மாநகராட்சிக்கு 2016ம் ஆண்டு கடிதம் அனுப்பியுள்ளேன்.

அந்த கடிதத்தில் வேறு ஒரு நிலம் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அதற்கும் கோவில் நிலத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கூறி, கோவில் நிலத்தை அளவீடு செய்யக் கோரி, மாநகராட்சிக்கும், தாசில்தாரருக்கும் நான் அளித்த மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தகுதியான சர்வேயரை கொண்டு கோவில் நிலத்தை அளவீடு செய்து இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாம்பலம் தாசில்தாரருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 26ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்