ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும்

ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

Update: 2022-11-25 18:45 GMT

ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

குறைதீர்க்கும் கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். கூட்டத்தில் கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் பெற்றப்பட்ட 144 மனுக்களில், தகுதியான 127 மனுக்களுக்கு துறை அலுவலர்கள் பதிலளித்தனர். 14 மனுக்கள் நிலுவையில் உள்ளதாகவும், 3 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

விவசாயிகளுக்கு தீவன விதைகள் வழங்க வேண்டும். மோரனஅள்ளி ஏரிக்கு மின்மோட்டார் மூலம் தண்ணீர் கொண்டு வந்து நிரப்ப வேண்டும். விவசாயிகளிடமிருந்து ஆவின் பால் கொள்முதல் செய்யும் போது, கணக்கீடு செய்வதில் முறைகேடு நடைபெறுகிறது. ராயக்கோட்டை அருகே கவுரிபுரம் ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றி, தூர்வார வேண்டும். திம்மாபுரம் ஏரியில் இருந்து சவுட்டஅள்ளி ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். திம்மாபுரம் ஏரி தூர்வாரி, ஆழப்படுத்தப்படவில்லை.

குளிர்பதன கிடங்கு

மேலும், ஆக்கிரமிப்புகளால் ஏரிக்கு கால்வாய்கள் மூலம் வரும் தண்ணீர் மீண்டும் தென்பெண்ணை ஆற்றுக்கு செல்கிறது. மாவட்டத்தில் தற்போது விவசாயிகள் தக்காளி, முள்ளங்கி சாகுபடியை அதிகளவில் மேற்கொள்கின்றனர். விலை வீழ்ச்சியின் போது தக்காளி, முள்ளங்கியை பதப்படுத்த குளிர்பதன கிடங்கு இல்லாததால் விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

ஊத்தங்கரை அருகே வெள்ளப்பட்டியில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடனை திரும்ப செலுத்திய பிறகு மீண்டும் பயிர் கடன் வழங்காமல் காலதாமதம் செய்து வருகின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

அதற்கு பதில் அளித்து கலெக்டர் பேசியதாவது:-

பயிர்க்கடன்

ஆவினுக்கு பால் கொள்முதல் செய்யும் போது, விவசாயிகளின் முன்னிலை சரியான முறையில் கணக்கீடு செய்ய வேண்டும். மாவட்டத்தில் உள்ள ஏரிகள் ஆக்கிரமிப்பை காலதாமதம் இல்லாமல் உடனடியாக அகற்ற அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில் பாரபட்சம் இல்லாமல் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தக்காளி கிலோ ரூ.10-க்கும் விற்பனை செய்யப்பட்டால், ஏக்கருக்கு ரூ.1 லட்சம் விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர். எனவே, குளிர்பதன கிடங்கு அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுறவு வங்களில் பயிர்க்கடன் தாமதம் இல்லாமல் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயினி, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் முகமது அஸ்லாம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி, கால்நடை துணை இயக்குனர் மரியசுந்தரம், தாட்கோ பொது மேலாளர் யுவராஜ் மற்றும் அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்