பாப்பாரப்பட்டியில் மருந்து கடையில் கருத்தடை மாத்திரை வாங்கி சாப்பிட்ட இளம்பெண் சாவு-கடைக்காரர் கைது

Update: 2022-12-19 18:45 GMT

தர்மபுரி:

பாப்பாரப்பட்டியில் கருத்தடை மாத்திரை வாங்கி சாப்பிட்ட இளம்பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மருந்து கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

இளம்பெண் சாவு

தர்மபுரி மாவட்டம் பனைக்குளம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு அதிக அளவு ரத்தப்போக்கு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மருத்துவ துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த இளம்பெண்ணுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்திருப்பதும், மீண்டும் கர்ப்பம் அடைந்ததால் பாப்பாரப்பட்டியில் உள்ள ஒரு மருந்து கடையில் கருத்தடை மாத்திரை வாங்கி சாப்பிட்டதும் தெரியவந்தது.

உரிமையாளர் கைது

இதுதொடர்பாக தர்மபுரி மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் சாந்தி, மருந்துகள் ஆய்வாளர் சந்திர மேரி ஆகியோர் சம்பந்தப்பட்ட மருந்து கடையில் ஆய்வு செய்தனர். அப்போது டாக்டர்களின் பரிந்துரை இல்லாமல் கருத்தடை மாத்திரைகள் அங்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. மருந்து கடையில் கீழ் தளத்தில் மருத்துவ சிகிச்சை அளித்ததும் உறுதியானது. இதையடுத்து அந்த மருந்து கடைக்கு மருத்துவ துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இது தொடர்பாக பென்னாகரம் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் கனிமொழி பாப்பாரப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அதியமான் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து அந்த மருந்து கடையின் உரிமையாளர் செல்வராஜ் (வயது 45) கைது செய்யப்பட்டார். மேலும் சம்பவம் குறித்து தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்