தாய்மார்கள் பாலூட்டும் அறை பூட்டி கிடக்கும் நிலை
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பஸ் நிலையங்களில் தாய்மார்கள் பாலூட்டும் அறை எவ்வித பயன்பாடும் இன்றி பூட்டி கிடக்கும் நிலை உள்ளது. இதை மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பஸ் நிலையங்களில் தாய்மார்கள் பாலூட்டும் அறை எவ்வித பயன்பாடும் இன்றி பூட்டி கிடக்கும் நிலை உள்ளது. இதை மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பாலூட்டும் அறை
ஒரு தாய் தனது குழந்தையை எவ்வித நோயும் இன்றி நல்ல ஆரோக்கியத்துடன் வளர்ப்பதற்கு தாய்ப்பால் கொடுப்பது மிகவும் அவசியம். பழங்காலத்தில் உள்ள பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்து ஆரோக்கியத்துடன் வளர்த்து வந்தனர். ஆனால் இன்றயை காலக்கட்டத்தில் பெண்கள் அணியும் ஆடைகள் காரணமாக பொது இடத்தில் தனது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க பெரும் பிரச்சினையாக உள்ளது.
இதன் காரணமாக பெண்கள் குழந்கைளுக்கு புட்டிபால் கொடுக்கும் நிலை இருந்து வந்தது. இதையடுத்து கடந்த 2013-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் உள்ள பஸ் நிலையங்களில் பெண்கள் தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் வகையில் பாலூட்டும் அறை திறக்கப்பட்டு இயங்கி வந்தது. அந்த அறையில் இருக்கைகள், மின் விசிறி உள்ளிட்டவைகள் இருந்தது.
பூட்டி கிடக்கும் நிலை
ஆனால் கடந்த சில வருடங்களாக இந்த அறை எவ்வித பாராமரிப்பும் இன்றி பூட்டிய நிலையில் உள்ளது. சில இடங்களில் இந்த அறையில் வைக்கப்பட்டிருந்த இருக்கைகள் சேதமடைந்த நிலையிலும், சில இடங்களில் துர்நாற்றம் வீசும் வகையிலும் அசுத்தமாக உள்ளது. சில இடங்களில் இந்த அறையை புறக்காவல் நிலையமாக மாற்றி தற்போது இயங்கி வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, திருப்பத்தூர், காரைக்குடி, தேவகோட்டை, சிங்கம்புணரி, மானாமதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த பாலூட்டும் அறை திறக்கப்பட்டு அனைத்து இடங்களிலும் பயன்பாடு இல்லாமல் கிடக்கிறது. இதனால் பாலூட்டும் பெண்களுக்கு பெரும் சிரமமாக உள்ளது.
பயன்பாட்டுக்கு வரவேண்டும்
இதுகுறித்து ராமஅமிர்தம் (தேவகோட்டை, ரஸ்தா) கூறியதாவது:- தாய்மை உணர்வோடு தொடங்கப்பட்ட இந்த பாலூட்டும் அறை தற்போது பல்வேறு இடங்களில் பயன்பாடு இன்றி கிடப்பது மிகவும் வேதனைக்குரியதாகும். சில இடங்களில் உள்ள இந்த அறையில் துர்நாற்றமும், சில இடங்களில் அறையில் வைக்கப்பட்ட மின்விசிறி மற்றும் இருக்கைகள் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் கைக்குழந்தையுடன் பஸ் நிலையத்திற்கு வரும் பெண்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கும் நிலை உள்ளது. எனவே தமிழக அரசு இதை எவ்வித அரசியல் நோக்கத்துடன் பார்க்காமல் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுலோச்சனா(காரைக்குடி):- இன்றைய காலக்கட்டத்தில் உள்ள பெண்கள் தங்களது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது என்பது அரிதான செயலாக உள்ளது. இருப்பினும் சில பெண்கள் தங்களது குழந்தைகள் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டி தாய்ப்பால் கொடுத்து வளர்த்து வருகின்றனர். அவர்கள் வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய வேளையில் பஸ் நிலையத்தில் தங்களுடைய குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டிய நிலை இருந்தால் ஒருவித தயக்கத்துடன் இருக்க வேண்டிய நிலை இருக்கும். அவற்றை போக்கும் வகையில் தொடங்கப்பட்ட இந்த பாலூட்டும் அறை பல்வேறு இடங்களில் பூட்டி கிடப்பதும், சில இடங்களில் பயன்பாடு இன்றி கிடப்பதும் வேதனைக்குரிய செயலாகும். எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு உடனடியாக மீண்டும் இந்த அறையை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்றார்.