தர்மபுரியில் தொழிற்சங்கங்கள் சார்பில்மே தின விழா கொண்டாட்டம்கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது

Update: 2023-05-01 19:00 GMT

தர்மபுரியில் தொழிற்சங்கங்கள் சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கொடியேற்றி தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

தி.மு.க. தொழிற்சங்கம்

தர்மபுரியில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அந்தந்த பகுதிகளில் தொழிற்சங்க கொடியேற்றி தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் மே தின ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

மே தினத்தையொட்டி தி.மு.க. தொழிற்சங்கமான திராவிட பஞ்சாலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் தர்மபுரி அடுத்த தடங்கம் கிராமத்தில் உள்ள தனியார் நூல்மில் முன்பு சங்க கொடியேற்று விழா நடைபெற்றது. ஒருங்கிணைந்த மாவட்ட சங்க நிர்வாகி ராஜேந்திரன் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் மாரியப்பன், பெரியண்ணன், முனுசாமி, மாது, ராஜா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்ரமணி கலந்து கொண்டு சங்க கொடியினை ஏற்றி வைத்து, தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் சங்க நிர்வாகிகள் ராஜா, வெங்கடேஷ், காவேரி, மாது, மாதையன், ராஜலிங்கம் உள்ளிட்ட நூல் மில் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

அண்ணா தொழிற்சங்கம்

அ.தி.மு.க. தொழிற்சங்கமான தர்மபுரி மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா தர்மபுரியில் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது. டாஸ்மாக், மின்சார வாரியம், ஆட்டோ தொழிற்சங்கம், சிறு லாரி டிரைவர்கள் சங்கம், மத்திய கூட்டுறவு வங்கி, அரசு போக்குவரத்துக் கழகம் ஆகிய பிரிவுகளின் சார்பில் நடைபெற்ற விழாக்களுக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். மாநில விவசாய பிரிவு தலைவர் டி.ஆர். அன்பழகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர். வெற்றிவேல், அண்ணா கூட்டுறவு பணியாளர்கள் சங்க மாநில செயலாளர் சின்அருள்சாமி, கட்டுமான பிரிவு மாநில இணை செயலாளர் சிங்கராயன், அரசு போக்குத்து கழக மண்டல செயலாளர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க. நகர செயலாளர் பூக்கடை ரவி வரவேற்று பேசினார்.

விழாக்களில் அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில பொருளாளர் அப்துல் ஹமீது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சங்க கொடியை ஏற்றி வைத்து தொழிலாளர்களுக்கு இனிப்பு உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கினார்.இதில் தொழிற்சங்க ஒன்றிய செயலாளர் செல்வம், பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கிருஷ்ணன், மாது, அன்பழகன், முனியப்பன், தங்கராஜ், அங்கப்பன், ரவி, செந்தில்குமார், வேல்முருகன், கோவிந்தன், பாரத், மாணிக்கம், கோவிந்தராஜ், முனிரத்தினம், பெரியசாமி, சிலுவைராஜ், தங்கவேல் ஜீவா அழகேசன் உள்ளிட்ட ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம்

தர்மபுரி மாவட்ட சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா தர்மபுரியில் கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி தர்மபுரி பெரியார் சிலை அருகில் ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகில் வந்தடைந்தது. அங்கு மே தின விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் நாகராசன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் கலாவதி வரவேற்று பேசினார். மாநில செயலாளர் கோபி குமார், மாவட்ட செயலாளர் ஜீவா கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். தொழிலாளர்களின் உரிமையை பறிக்கும் 4 சட்ட தொகுப்புகளை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். தமிழ்நாடு அரசு தொழிற்சாலைகள் திருத்த சட்டத்தை கைவிட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இதில் மாவட்ட நிர்வாகிகள் அங்கம்மாள், முரளி, சண்முகம், லெனின் மகேந்திரன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சேகர், பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணன், இன்சூரன்ஸ் ஊழியர் சங்க கோட்ட இணைச்செயலாளர் மாதேஸ்வரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முடிவில் மாவட்ட துணைத்தலைவர் நாகராசன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்