லாரி மோதி தொழிலாளி பலி

லாரி மோதி தொழிலாளி பலியானார்.

Update: 2022-09-12 18:20 GMT

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெண்பாவூரை சேர்ந்தவர் ஜட்ஜ்(வயது 48). இவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சசிகலா(42). இவர்களுக்கு திருமணமாகி தேவராஜ்(15) என்ற மகனும், நந்திதா(13) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் ஜட்ஜ் 2 நாட்களுக்கு முன்பு தனது அண்ணன் மகன் திருமணத்திற்காக குடும்பத்துடன் வெண்பாவூர் வந்துள்ளார். நேற்று காலை வெங்கனூரில் உள்ள கோவிலில் அந்த திருமணம் நடந்தது. அதன் பிறகு ஜட்ஜ் ஒரு மோட்டார் சைக்கிளில் வெங்கனூரில் இருந்து வெண்பாவூருக்கு சென்றுள்ளார். கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனை எதிரில் உள்ள கல்லாற்று பாலத்தில் சென்றபோது எதிர்பாராத விதமாக ஜட்ஜ் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த லாரி மோதியது. இதில் ஜட்ஜ் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜட்ஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்