கோவில் குளத்தில் மூழ்கி தொழிலாளி சாவு - தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டனர்

கோவில் குளத்தில் இறங்கி பாசியை சுத்தம் செய்ய முயன்ற போது நீரில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக பலியானார்.

Update: 2023-01-29 06:51 GMT

கொண்டித்தோப்பு கிருஷ்ணப்ப டேங்க் தெருவில் பழமை வாய்ந்த காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவில் குளத்தில் பாசி படிந்து எந்த பயன்பாட்டிற்கு இல்லாத நிலையில் இதனை சுத்தம் செய்ய பழைய வண்ணாரப்பேட்டை ஸ்டான்லி நகரைச் சேர்ந்த நாராயணன் (வயது 55), மற்றும் அவருடைய நண்பர் ரவி ஆகிய இருவரையும் கோவில் நிர்வாகம் வேலைக்கு அழைத்து பணியில் நேற்று ஈடுபட்டு இருந்தனர். இந்நிலையில் நாராயணன் பாசியை எடுத்து சுத்தம் செய்ய குளத்தில் இறங்கியபோது, கால் தவறி குளத்தில் விழுந்தார். பின்னர் மூச்சு திணறி உயிரிழந்தார். இதையறிந்து அதிர்ச்சியடைந்த கோவில் நிர்வாகத்தினர் உடனடியாக ஏழு கிணறு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, தகவலின் பேரில், இன்ஸ்பெக்டர் மனோன்மணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 2 மணி நேரத்துக்கு மேலாக போராடி நாராயணன் உடலை மீட்டனர். இது குறித்து ஏழு கிணறு போலீசார் அறிந்து வந்து நாராயணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவில் குளத்தில் பாசி எடுக்க சென்ற தொழிலாளி தவறி விழுந்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்