செங்கல்லால் அடித்து கூலி தொழிலாளி கொலை

கே.வி.குப்பம் அருகே செங்கல்லால் அடித்து கூலி தொழிலாளியை கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-02-27 16:59 GMT

கூலி தொழிலாளிகள்

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் நாகல் ஊராட்சி மலையடிவாரத்தில் உள்ள சிறு கிராமம் தேன்கனிமலை. இப்பகுதியைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவரின் மகன்கள் சேகர் (வயது 35) சாமு (32), கூலித் தொழிலாளிகள்.

இவர்கள் தனித்தனியே வீடுகளில் அவரவர் குடும்பத்தினருடன் வசித்து வந்தனர். இவர்களில் சேகரின் மனைவி ராஜேஸ்வரி, கணவனை பிரிந்து மகன் யுகேஷ் (14), மகள் தாட்சாயணி (12) இருவரையும் அழைத்துக்கொண்டு அணைக்கட்டு அருகே மருதவள்ளிப்பாளையத்தில் உள்ள தன் தாய் வீட்டுக்குச் சென்று விட்டார்.

இதனால் சுமார் 10 ஆண்டுகளாக மனைவி, குழந்தைகளைப் பிரிந்து சேகர் தனியாக வாழ்ந்து வந்தார். அதே நேரம் தன்னுடைய தம்பி மனைவி, குழந்தைகளுடன் குடும்பத்தோடு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் என்பதை சேகரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

அடித்துக்கொலை

அதேபோல் குடும்பத்தினருடன் வாழ முடியவில்லையே என்ற ஏக்கத்துடன், தம்பி குடும்பத்தினருடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். மேலும் அவர் அடிக்கடி தொல்லைகள் கொடுத்து வந்ததால் நிம்மதி இழந்த நிலையில் சாமு குடும்பத்தினர் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சேகர், வழக்கம்போல் குடித்துவிட்டு சாமுவின் வீட்டுக்குள் சென்று சாமுவின் மனைவியிடம் தகராறு செய்து, வீட்டின் கதவு ஜன்னல்களை உடைத்து கூச்சல் போட்டு தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த சாமு அண்ணனை தட்டிக் கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி சிறிதுநேரத்தில் கைகலப்பாக மாறியது.

அப்போது வீட்டிற்கு வெளியே சென்ற சேகர் சாமுவை கைகளால் சரமாரியாக தாக்கியபோது வலி தாங்க முடியாமல் அலறினார். இதனால் ஆத்திரம் அடைந்த சாமு அருகில் கிடந்த செங்கல்லை எடுத்து சேகரின் தலை மீது ஓங்கி அடித்தார். இதில் தலையில் வெட்டுகாயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த சேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தம்பி கைது

இதனால் அதிர்ச்சி அடைந்த சாமு, கிராம நிர்வாக அலுவலர் ராஜாவிடம் சரண் அடைந்து, தான் சேகரைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு கே.ராமமூர்த்தி, கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேகரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்ததனர்.

மேலும் சாமுவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்