கும்பகோணம், பாபநாசம் கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
குருத்தோலை ஞாயிறு பவனி
கும்பகோணம் அலங்கார அன்னை பேராலயத்தில் நேற்று குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆயர் அந்தோணிசாமி தலைமை தாங்கினார். குருத்தோலை பவனி சர்ச் ரோடு, காமராஜர் சாலை வழியாக பேராலயத்திற்கு வந்தது. பின்னர் குருத்தோலை சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
இதில் பேராலய பங்குத்தந்தை பிலோமின்தாஸ், உதவி பங்குத்தந்தையர்கள் எட்மண்ட், பிரேம்நாத் மற்றும் பேராலய பங்குப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கும்பகோணம் அலங்கார அன்னை பேராலய உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
தென்னிந்திய திருச்சபை தூய தோமா ஆலயம்
கும்பகோணம் தென்னிந்திய திருச்சபை தூய தோமா ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு ஆராதனை நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆயர் ராய்கெசியான் தலைமை தாங்கினார். முன்னதாக சபை மக்கள் கையில் குருத்தோலைகளை ஏந்தியவாறு பவனியாக சென்றனர். தொடர்ந்து ஆராதனை நடைபெற்றது. ஆராதனையில் ஞாயிறு பள்ளி மாணவ-மாணவிகளின் சிறப்பு பாடல் பாடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஆலயத்தின் செயலாளர் ஸ்ரீராஜ், பொருளாளர் ஆல்பர்ட் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள், சபை அங்கத்தினர்கள் செய்திருந்தனர். அதேபோல் கும்பகோணம் மேம்பாலம் அருகே நீடாமங்கலம் சாலையில் அமைந்துள்ள தமிழ் சுவிசேச லுத்ரன் திருச்சபையின் திருச்சிலுவை ஆலயத்தில் ஆயர் ஜான்சன் சாமுவேல் தலைமையில் ஆராதனை நடைபெற்றது.
பாபநாசம்
பாபநாசம் புனித செபஸ்தியார் திருத்தலத்தில் நேற்று காலை குருத்தோலை ஞாயிறு பவனி, கொடியேற்று விழா நடைபெற்றது. முன்னதாக பாபநாசம் புனித செபஸ்தியார் ஆலய பங்குத்தந்தை கோஸ்மான் ஆரோக்கியராஜ் தலைமையில் குருத்தோலை பவனி ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஆலயத்தை வந்தடைந்தது. பின்னர் சென்னை தியான ஆசிரமம் பொருளாளர் டோமினிக் ஜெயக்குமார் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து ஆலய வளாகத்தில் திருவிழா கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவில் பாபநாசம் புனித செபஸ்தியார் ஆலயத்தின் இணை பங்கு தந்தை தார்த்தீஸ், திருத்தொண்டர் வில்லியம் கவாஸ்கர் மற்றும் பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.