எரிக்கப்படும் குப்பைகளால் திணறும் நோயாளிகள்

கணியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அருகில் குப்பைகள் எரிக்கப்படுவதால் நோயாளிகள் அவதிப்படும் நிலை உள்ளது.

Update: 2023-06-27 15:55 GMT

சுகாதார சீர்கேடுகள்

மடத்துக்குளத்தையடுத்த கணியூர் ஆஸ்பத்திரிமேடு பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.

இந்த ஆஸ்பத்திரிக்கு தினசரி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வந்து பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் ஏராளமானவர்கள் இந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சை மற்றும் பிரசவம் பார்த்துக் கொள்கின்றனர்.

இந்த நிலையில் இந்த ஆஸ்பத்திரிக்கு முன்னால் சாலை ஓரத்தில் அதிக அளவில் குப்பைகள் கொட்டப்படுகின்றன.

இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் குப்பைகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

புகை மண்டலம்

அதுமட்டுமல்லாமல் குப்பைகளுக்கு அவ்வப்போது தீ வைத்து கொளுத்தப்படுகிறது. கொழுந்து விட்டு எரியும் தீயால் அருகிலுள்ள சாலையோர மரங்கள் கருகி வீணாகி வருகிறது. மேலும் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்வதால் வாகன ஓட்டிகள் தடுமாறி விபத்துக்களில் சிக்கும் நிலை உள்ளது. அத்துடன் ஆஸ்பத்திரி முன் உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்து நிற்கும் பயணிகள் புகையால் அவதிப்படுகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் ஆஸ்பத்திரியில் தங்கி பிரசவத்துக்கு முன் மற்றும் பின்பான சிகிச்சை பெற்று வரும் தாய்மார்கள் மற்றும் இளம் சிசுக்கள் புகையால் மூச்சுத்திணறல் மற்றும் சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

எனவே ஆரம்ப சுகாதார நிலையம் முன் குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும், தீ வைப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்