கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் யானை மங்களம் ஆனந்த குளியல்
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் யானை மங்களம் ஆனந்த குளியல்;
புதிதாக அமைக்கப்பட்ட நீச்சல் குளத்தில் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் யானை மங்களம் ஆனந்த குளியல் போட்டது.
நீச்சல் குளம்
கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான மங்களம் யானை கோவில் வளாகத்திலேயே பராமரிக்கப்பட்டு வருகிறது. மங்களம் யானை குளிப்பதற்காக கோவில் வளாகத்திலேயே உபயதாரர்கள் பங்களிப்பில் ரூ.8 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குளத்தை சுற்றி கான்கீரிட் தளமும், 8 அடி உயரத்தில் சுவர் மற்றும் 29 அடி நீள, அகலத்தில் நீச்சல் குளம் கட்டப்பட்டு பாதுகாப்பாக இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
மங்களம் யானை நடைப்பயிற்சி மேற்கொள்ள வசதியாக நீச்சல் குளத்தை சுற்றிலும் 500 மீட்டருக்கு 14 நவீன மின்விளக்குகள் ரூ.1 லட்சம் மதிப்பில் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அமைச்சர் ரசித்து பார்த்தார்
புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த நீச்சல் குளத்தை அமைச்சர் சேகர்பாபு நேற்று முன்தினம் திறந்து வைத்தார். குளத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரில் மங்களம் யானை இறங்கி உற்சாக குளியல் போட்டது. இதனை அமைச்சர் ரசித்து பார்த்தார். 55 வயதுடைய மங்களம் யானை கடந்த 1982-ம் ஆண்டு காஞ்சி மகாபெரியவரால் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலுக்கு வழங்கப்பட்டது.
இந்த யானையை அசோக் என்கிற பாகன் பராமரித்து வருகிறார். மங்களம் யானை தனது பாகனோடு அவ்வப்போது விளையாடி மகிழும் காணொலிகள் சமூக வலைதளங்களில் வெளியாவது வழக்கம்.
புதிதாக அமைக்கப்பட்ட நீச்சல் குளத்தில் மங்களம் யானை தனது பாகனுடன் குளித்து உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தது. இதனை கோவிலுக்கு வந்த பக்தர்கள், பொதுமக்கள், சிறுவர்கள் கண்டு ரசித்தனர்.