வாணாபுரத்தில் 48 அடி உயர பாதாள காளியம்மன் சிலைக்கு கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்
வாணாபுரத்தில் 48 அடி உயர பாதாள காளியம்மன் சிலைக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;
ரிஷிவந்தியம்,
ரிஷிவந்தியம் அருகே வாணாபுரம் கிராமத்தில் பாதாள காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 48 அடி உயரம் உள்ள ஸ்ரீபாதாளகாளியம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி யாகத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
கும்பாபிஷேகம்
நேற்று காலை யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு 48 அடி உயர ஸ்ரீபாதாளகாளியம்மன் சிலைக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, ஸ்ரீஅக்னி வீரன், ஸ்ரீநொண்டி வீரன், எல்லை பிடாரியம்மன், எல்லைக்கட்டு மாரியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் வீரா ஆர்ட்ஸ் மற்றும் பிரபா, ஊர் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர். பகண்டை கூட்டு ரோடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.