அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம்

சோபனாபுரம், திருச்சி, தா.பேட்டை பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2022-07-11 19:29 GMT

உப்பிலியபுரம், ஜூலை.12-

சோபனாபுரம், திருச்சி, தா.பேட்டை பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மாரியம்மன் கோவில்

உப்பிலியபுரத்தை அடுத்த சோபனபுரம் ஆலமர வீதியில் உள்ள மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. முன்னதாக பல்வேறு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து காலை 9 மணி முதல் 10.10 மணிக்குள் மாரியம்மன், பரிவார தெய்வங்களான மூப்பனார், துர்கை அம்மன் ஆகிய தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருச்சி

இதேபோல் திருச்சி காஜாபேட்டை, கிருஷ்ணர் கோவில் தெருவில் பாலக்காடு பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 36 வருடங்களுக்கு பிறகு நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக கடந்த 9-ந்தேதி காலை விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், வாஸ்து ஹோமம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து காலை 7.30 மணிக்கு காவிரி ஆற்றில் இருந்து திருமஞ்சனம் கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

10-ந்தேதி 2-ம் கால யாக பூஜையும், வேத பாராயணம் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ஓம் சக்தி பராசக்தி என்று முழங்கினர். மேலும் பக்தர்கள் மீது புனித நீர் தெளித்தனர். அதன் பின்னர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

தா.பேட்டை

இதேபோல் தா.பேட்டை பிள்ளாதுறையில் உள்ள மகாகணபதி, மகா மாரியம்மன், முன்னுடையான் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடுதல், புனித நீர் எடுத்து வருதல், யாகசாலை பிரவேசம், யாக வேள்வி, வேதபாராயணம், அங்குரார்ப்ணம், வாஸ்து சாந்தி, நாடி சந்தானம், தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் செய்யபட்டு கடம் புறப்பாடு நடைபெற்றது. அப்போது கோவில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. மகாகணபதி, மகாமாரியம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்களும், வழிபாடுகளும் நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்