உறையூர் வெக்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று வெகுசிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.;
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று வெகுசிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
வெக்காளியம்மன் கோவில்
திருச்சி உறையூரில் சக்தி தலங்களில் புகழ்பெற்ற வெக்காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு கருவறையில் அம்மன் கூரையின்றி மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும், வெட்ட வெளியில் வீற்றிருந்தும் மக்களை காத்து வருகிறார்.
பல்வேறு சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் புதிதாக கருங்கல் அர்த்தமண்டபம், அர்த்தமண்டப கதவு மற்றும் நிலைக்கு வெள்ளி தகடு போர்த்துதல், அலங்கார மண்டபம், தூண்கள் கலைநயத்துடன் புதுப்பிக்கும் திருப்பணிகள் நடைபெற்றன. மேலும் அனைத்து மண்டபங்கள், ராஜகோபுரம், விமானங்கள், பழுதுநீக்கி புதுப்பித்தல் உள்பட பல்வேறு திருப்பணிகளும் நடைபெற்றன.
யாகசாலை பூஜைகள்
இந்த திருப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 1-ந்தேதி விநாயகர் வழிபாடு செய்யப்பட்டு, வெக்காளியம்மனிடம் அனுமதி பெறப்பட்டது. தொடர்ந்து 2-ந்தேதி காவிரியாற்றில் இருந்து பக்தர்கள் புனிதநீர் கொண்டுவந்தனர். அன்று மாலை யாகசாலை பிரவேசம் செய்யப்பட்டு, முதற்கால யாகபூஜைகள் தொடங்கின.
கடந்த 3-ந்தேதி 2-ம் கால மற்றும் 3-ம் கால யாகபூஜையும், 4-ந்தேதி 4-ம் கால மற்றும் 5-ம் கால யாகபூஜையும், நேற்று முன்தினம் 6-ம் கால மற்றும் 7-ம் கால யாகபூஜையும் நடைபெற்றது.
கும்பாபிஷேகம்
விழாவின் சிகர நிகழ்ச்சியாக 16 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 4 மணிக்கு 8-ம் கால யாகபூஜை நடைபெற்றது. தொடர்ந்து விநாயகர் பூஜை, அங்குரபூஜை, பிம்பசுத்தி, மூலாலய மூர்த்திகளுக்கு ரக்ஷா பந்தனம், காலை 5 மணிக்கு நாடிசந்தானம், ஸ்பர்சாஹுதி மற்றும் திரவியாஹுதியும், காலை 6 மணிக்கு மகா பூர்ணாஹுதியும், தீபாராதனை, யாத்ராதானம் நடைபெற்றது.தொடர்ந்து காலை 6.20 மணிக்கு யாகசாலையில் இருந்து மேளதாளம் முழங்க புனிதநீர் அடங்கிய கும்பங்களை திருவானைக்காவல் எஸ்.சந்திரசேகர சிவாச்சாரியர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கொண்டு கோவிலை வலம் வந்தனர். பின்னர் அவற்றை கோபுரத்துக்கும், விமானத்துக்கும் மூலஸ்தானத்துக்கும் எடுத்துச்செல்லப்பட்டது. சரியாக 6.45 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, மேளதாளம் முழங்க, பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி என்று விண்ணதிர கோஷம் எழுப்ப கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.
வீதி உலா
இதைத்தொடர்ந்து காலை 6.50 மணிக்கு வெக்காளியம்மன் மற்றும் பரிவார தெய்வ விக்கிரகங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் காலை 10 மணிக்கு மகா அபிஷேகமும், கலசபூஜைகளும், பகல் 12 மணிக்கு மகா தீபாராதனையும் நடத்தப்பட்டது. நேற்று மாலை 7 மணிக்கு வெக்காளியம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் கே.என்.நேரு, கலெக்டர் மா.பிரதீப் குமார், மாநகர போலீஸ் கமிஷனர் ஜி.கார்த்திகேயன், மேயர் மு.அன்பழகன், ஆணையாளர் வைத்திநாதன், உள்ளாட்சி பிரதிநிதிகள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர்கள் ஞானசேகரன், லட்சுமணன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.