அழகர்மலை உச்சியில் உள்ள ராக்காயி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் தரிசனம்

அழகர்மலை உச்சியில் உள்ள ராக்காயி அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-12-11 20:19 GMT

அழகர்மலை உச்சியில் உள்ள ராக்காயி அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ராக்காயி அம்மன் கோவில்

அழகர் மலை உச்சியில் உள்ள ராக்காயி அம்மன் கோவில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோவில் அழகர்கோவில் மலை அடிவாரத்திலிருந்து சுமார் 4 கி.மீ. தூரத்தில் 1,400 அடி உயரத்தில் இயற்கை எழிலில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் அம்மன் சன்னதி கிழக்கு பகுதியில் வற்றாத ஜீவநதியாக நூபுர கங்கை என்னும் சிலம்பாறு இருக்கிறது. சிலப்பதிகாரம் போன்ற சங்க இலக்கிய நூல்களில் இதன் பெருமைகள் கூறப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் கும்பாபிஷேக விழா நடந்தாலும் அழகர் மலை நூபுர கங்கை தீர்த்தமும் அவசியம் இடம் பெறும்.

இப்படி பிரசித்தி பெற்ற ராக்காயி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 9-ந் தேதி யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. தொடர்ந்து 10-ந் தேதியும் யாக சாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலையில் யாகசாலையில் இருந்து மேளதாளங்கள் முழங்க, தீவட்டி, வர்ணக் குடை பரிவாரங்கள், புனித தீர்த்தக்குடங்கள் ஊர்வலமாக கோவில் உள் பிரகாரத்திலிருந்து கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது.

கும்பாபிஷேகம்

அப்போது அதிசயமாக சாரல் மழை சில நிமிடங்கள் விழுந்தது. பட்டர்களின் வேத மந்திரங்கள் முழங்க, நூபுர கங்கையின் தீர்த்தம் குடம், குடமாக கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அப்போது வானில் கருடன்கள் வட்டமிட்டன. அப்போது பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு புனித தீர்த்தமும், பூஜை மலர்களும், பிரசாதமாக வழங்கப்பட்டது.

இந்த கும்பாபிஷேக விழாவில் அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு, வணிகவரி பத்திரபதிவு துறை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர், தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி, சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ.வெங்கடேசன், உபயதாரர்கள் மற்றும் அறநிலைய துறை, வருவாய்துறை, வனத்துறை, காவல் துறை, தீயணைப்பு துறை, அதிகாரிகள், திருக்கோவில் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதை தொடர்ந்து மூலவர் ராக்காயி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார். முன்னதாக விசேஷ பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்