கடலூர் அருகே திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
கடலூர் அருகே திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனா்.
நெல்லிக்குப்பம்,
கடலூர் அருகே நத்தப்பட்டு கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ திரவுபதி அம்மன் மற்றும் முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருப்பணிகள் நடந்து, நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி கடந்த 22-ந்தேதி காலை கணபதி ஹோமம், நவகிரக யாகத்துடன் விழா தொடங்கியது. பின்னர் மாலையில் விக்னேஸ்வர பூஜை, அங்குரார் பணம் நடந்து முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து நேற்று முன்தினம் 2-ம் கால யாக சாலைபூஜை, விசேஷ சாந்தி, வேத பாராயணம் நடந்து, மாலையில் 3-வது கால யாகசாலை பூஜை, சுமங்கலி பூஜை, இரவு அஸ்தபந்தனம் சாற்றுதல் நடைபெற்றது.
விழாவில் நேற்று காலை 4-ம் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி நடந்தது. பின்னர் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு திரவுபதி அம்மன் மற்றும் முத்து மாரியம்மன் விமான கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.