குமரியில் 15½ லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்

குமரி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலின்படி மொத்தம் 15 லட்சத்து 50 ஆயிரத்து 776 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை காட்டிலும் பெண் வாக்காளர்கள் 3 ஆயிரத்து 484 பேர் அதிகமாக உள்ளனர்.;

Update:2022-11-10 00:15 IST

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலின்படி மொத்தம் 15 லட்சத்து 50 ஆயிரத்து 776 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை காட்டிலும் பெண் வாக்காளர்கள் 3 ஆயிரத்து 484 பேர் அதிகமாக உள்ளனர்.

வரைவு வாக்காளர் பட்டியல்

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குமரி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கலெக்டர் அரவிந்த் பங்கேற்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். பின்னர் அவர் பேசும் போது கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 5-ந் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது 6 சட்டசபை தொகுதிகளிலும் 15 லட்சத்து 92 ஆயிரத்து 555 வாக்காளர்கள் இருந்தனர். அதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் தொடர்பான ஆய்வுப் பணி வீடு வீடாக சென்று மேற்கொள்ளப்பட்டது. அப்போது இறந்த வாக்காளர்களின் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. அந்த வகையில் மொத்தம் 51 ஆயிரத்து 169 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். புதிதாக 9 ஆயிரத்து 390 பேர் சேர்க்கப்பட்டார்கள். அதாவது 3 ஆயிரத்து 864 ஆண் வாக்காளர்களும், 5 ஆயிரத்து 520 பெண் வாக்காளர்களும், 6 இதர வாக்காளர்களும் புதிதாக சேர்க்கப்பட்டனர்.

பெண் வாக்காளர்கள் அதிகம்

அதைத்தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளிலும் 7 லட்சத்து 73 ஆயிரத்து 553 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 77 ஆயிரத்து 37 பெண் வாக்காளர்களும், 186 இதர வாக்காளர்களும் என மொத்தம் 15 லட்சத்து 50 ஆயிரத்து 776 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை காட்டிலும், பெண் வாக்காளர்கள் 3 ஆயிரத்து 484 பேர் அதிகம் உள்ளனர்.

2022-ம் ஆண்டு வாக்குச்சாவடி மறுசீரமைப்பு பணியின் போது விளவங்கோடு சட்டசபை தொகுதியில் கூடுதலாக ஒரு வாக்குச்சாவடி உருவாக்கப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் குமரி மாவட்டத்தில் 1695 வாக்குச்சாவடிகள் உள்ளன. வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் செய்ய வருகிற 12, 13 மற்றும் 26, 27 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ளலாம். சிறப்பு முகாம்களில் சம்பந்தப்பட்ட நபர் நேரில் வந்து திருத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. திருத்தம் செய்ய வேண்டியவரின் உறவினர்களே முகாமில் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலில் திருத்தத்தை செய்யலாம். மரணம் அடைந்தவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இருந்தால் அவற்றை நீக்க சிறப்பு முகாம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆதார் எண்

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் 69 சதவீதம் பேர் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். மீதம் உள்ளவர்களின் ஆதார் எண்ணையும் வாக்காளர் பட்டியலில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே முகாமில் பங்கேற்கும் பொதுமக்கள் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, நாகர்கோவில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், தேர்தல் தாசில்தார் சுசீலா, அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சேகர், அ.தி.மு.க. சார்பில் வக்கீல் ஜெயகோபால், காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார், பா.ஜனதா கட்சி சார்பில் ஜெகநாதன், நாகராஜன், தே.மு.தி.க. சார்பில் செல்வகுமார், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்