வறண்டு கிடக்கும் குளந்திரான்பட்டு பெரியகுளம்
காவிரியில் வெள்ளம் கரைபுரண்ட நிலையிலும் கல்லணை கால்வாய் பாசன குளமான குளந்திரான்பட்டு பெரியகுளம் வறண்டு கிடக்கிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.
கறம்பக்குடி:
குறுவை சாகுபடி
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகாவில் மொத்தம் உள்ள 39 ஊராட்சிகளில் முதலிப்பட்டி, செங்கமேடு, ஒடப்பவிடுதி, வாண்டான்விடுதி, ரெகுநாதபுரம், புது விடுதி, பாப்பாபட்டி, கீராத்தூர், காட்டாத்தி, கல்விராஜன்விடுதி, தீத்தான்விடுதி, குளந்திரான்பட்டு ஆகிய 12 ஊராட்சிகள் காவிரி பாசன பகுதிகள் ஆகும். கல்லணை கால்வாய் உளவயல் கிளை வாய்க்காலில் இருந்து வரும் காவிரி தண்ணீர் மூலம் இப்பகுதியில் உள்ள சுமார் 15 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. சில பகுதிகளில் நேரடி கால்வாய் பாசனமாகவும், சில இடங்களில் பாசன குளங்களில் தண்ணீர் நிரப்பி அதன் மூலமும் விவசாயம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு மேட்டூர் அணை முன்னதாகவே திறக்கப்பட்டதால் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளை போலவே கறம்பக்குடி பகுதி விவசாயிகளும் தண்ணீர் வரும் நம்பிக்கையில் முன்னதாக குறுவை சாகுபடியை தொடங்கினர். ஆனால் விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சி உள்ளது. கடைமடை பகுதிகளுக்கு இன்னும் முழுமையாக தண்ணீர் திறக்கப்படவில்லை.
கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை
இதனால் கறம்பக்குடி பகுதியில் உள்ள காவிரி பாசன குளங்களான குளந்திரான்பட்டு பெரியகுளம், ராங்கியன்விடுதி பெரிய ஏரி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பாசன குளங்கள் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கின்றன. இந்த பாசன குளங்களை நம்பி குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து கறம்பக்குடி காவிரி பாசன பகுதி விவசாயிகள் கூறுகையில், மேட்டூரில் முன்னதாகவே தண்ணீர் திறக்கப்பட்டதால் இந்த ஆண்டு குறுவை மற்றும் சம்பா சாகுபடி தண்ணீர் தட்டுப்பாடு இன்றி சுமூகமாக நடைபெறும் என எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு உள்ள நிலையிலும், தினமும் வினாடிக்கு 2 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் கடலுக்கு சென்றடைந்து வரும் சூழலிலும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வராததும் கிளை வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்படாமல் இருப்பதும் வேதனையாக உள்ளது. எனவே கறம்பக்குடி பகுதியில் உள்ள அனைத்து பாசன குளங்களுக்கும் தண்ணீர் செல்லும் வகையில் காவிரி பாசன பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.