திருவெண்ணெய்நல்லூர்கிருபாபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம்
திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
திருவெண்ணெய்நல்லூர்,
திருவெண்ணெய்நல்லூரில் பிரசித்தி பெற்ற மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி சிறப்பு பூஜைகள் நடந்து வந்த நிலையில் கடந்த 1-ந்தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. முக்கிய விழாவான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. சிறப்பு பூஜைகள் நடந்து, காலை 10:30 மணிக்கு உற்சவர் சிவபெருமான், பார்வதி தேவி சமேதமாக அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து அங்கு திரண்டிருந்த பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இதில் பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம் கணேசன், கோவில் செயல் அலுவலர் சூரியநாராயணன், பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள், உற்சவ தாரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய் திருந்தனர். விழாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) பங்குனி உத்திர தீர்த்தவாரி நிகழ்ச்சியும், நாளை மறுநாள் சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் பிரமோற்சவ விழா நிறைவடைகிறது.