கிருஷ்ணகிரி பள்ளி மாணவி வன்கொடுமை வழக்கு - நா.த.க. முன்னாள் நிர்வாகி கைது

கிருஷ்ணகிரி பள்ளி மாணவி வன்கொடுமை வழக்கு தொடர்பாக நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.;

Update:2024-09-07 09:42 IST

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கந்திகுப்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த போலி என்.சி.சி. முகாமில் கலந்து கொண்ட 13 வயதுடைய 8-ம் வகுப்பு மாணவியை போலி பயிற்சியாளர் சிவராமன் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும், 13 மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக சிவராமன் மற்றும் சம்பவத்தை மறைத்த பள்ளி தாளாளர், முதல்வர் உள்பட மொத்தம் 13 பேர் பர்கூர் அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே கைது நடவடிக்கை முன்பு, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சிவராமன், சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 23-ந் தேதி உயிரிழந்தார். பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்து, தமிழக முதல்- அமைச்சர் உத்தரவின் பேரில் ஐ.ஜி. பவானீஸ்வரி தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவும், சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையிலான பல்நோக்கு குழுவினரும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் வேறு ஒரு தனியார் பள்ளியில் சிவராமனால் நடத்தப்பட்ட போலி முகாமில் கலந்து கொண்ட 14 வயது மாணவியும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டது தெரிந்தது. தொடர்ந்து அப்பள்ளியின் பெண் முதல்வர் கைது செய்யப்பட்டார். இந்த சூழலில் சிவராமனால் நடத்தப்பட்ட போலி முகாம்கள் குறித்த தகவல்களை மறைத்ததாக, காவேரிப்பட்டணம் சந்தைபாளையம் பகுதியைச் சேர்ந்த என்.சி.சி. பயிற்சியாளர் கோபு (வயது 47) என்பவரை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் நேற்று கைது செய்திருந்தனர்.

இந்நிலையில் கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி உயிரிழந்த சிவராமனுக்கு உதவியதாக நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி கருணாகரன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவராமன் அலுவலகத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவு கருவியை தீ வைத்து எரித்ததாக கருணாகரனை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்