கரூர் மாவட்ட பகுதியில் கிருஷ்ண ஜெயந்தி விழா
கரூர் மாவட்ட பகுதியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
கிருஷ்ண ஜெயந்தி
கரூரில் நேற்று விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இதற்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து கரூர் மேட்டு தெருவில் உள்ள அபய பிரதான ரெங்கநாதர் கோவிலில் இருந்து கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் வரை ஊர்வலமாக வந்தனர். இதில், விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் மற்றும் குழந்தைகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வேலாயுதம்பாளையம்
மண்மங்கலம் தண்ணீர் பந்தல்பாளையத்தில் உள்ள நவநீத கிருஷ்ணன் கோவிலில் சுவாமிக்கு பால், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. மாலையில் சுவாமி சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். தொடர்ந்து கிருஷ்ணர், ராதை வேடமணிந்து வந்து சிறுவர்-சிறுமிகள் நடனமாடி அசத்தினர். பின்னர் உறியடி நிகழ்ச்சி நடந்தது.
தோகைமலை
தோகைமலை வரதராஜர் பெருமாள் கோவிலில் சுவாமிக்கு பால், பழம், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு வாசனை பொருட்களால் அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் கிருஷ்ணர் படம் வைத்து பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர். சிறுவர்-சிறுமிகள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து அப்பகுதியில் உள்ளவர்களுக்கு பொங்கல் மற்றும் இனிப்புகள் வழங்கினர்.