கோயம்பேட்டில் மெட்ரோ ரெயிலில் கண்ணாடி உடைந்து விபத்து - 4 பயணிகள் காயம்
கோயம்பேட்டில் மெட்ரோ ரெயிலில் கண்ணாடி உடைந்து விபத்துக்குள்ளானதில் 4 பயணிகள் காயம் அடைந்தனர்.;
சென்னை,
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் விமான நிலையம் முதல் சென்ட்ரல் ரெயில் நிலையம் வரையில் ஒரு வழித்தடத்திலும், விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை மற்றொரு வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசல் இல்லாமல் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய முடிவதால் பொதுமக்களிடையே மெட்ரோ ரெயிலுக்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், சென்னை கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையத்தில் டிரைவர் திடீரென பிரேக் அடித்தபோது எதிர்பாராத விதமாக ரெயிலின் உள்பகுதியில் இருந்த கண்ணாடி உடைந்து சிதறியது. இதில் ரெயிலில் பயணம் செய்த 4 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
உடனே ரெயில் நிறுத்தப்பட்டு காயமடைந்த பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.