நிலா பிள்ளையார் வழிபாடு- விடிய, விடிய பெண்கள் கும்மியடித்து கொண்டாட்டம்

பவானி அருகே நிலா பிள்ளையார் வழிபாடு நடந்தது. இதில் விடிய, விடிய பெண்கள் கும்மியடித்து கொண்டாடினார்கள்.

Update: 2023-02-05 21:07 GMT

பவானி

பவானி அருகே நிலா பிள்ளையார் வழிபாடு நடந்தது. இதில் விடிய, விடிய பெண்கள் கும்மியடித்து கொண்டாடினார்கள்.

நிலா பிள்ளையார்

ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த குருப்பநாயக்கன்பாளையம் அருகே உள்ள என்.ஜி.ஜி.ஓ. காலனி பகுதியில் ஆண்டுதோறும் தை மாதம் முழுமுதற் கடவுளான விநாயகருக்கு நன்றி செலுத்தும் விதமாக நிலா பிள்ளையார் வழிபாடு என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி வீரமாத்தி அம்மன் நிலா பிள்ளையார் விழா குழுவின் சார்பில் என்.ஜி.ஜி.ஓ. காலனி பகுதியில் நேற்று முன்தினம் நடந்தது. இதற்காக 50-க்கும் மேற்பட்ட பெண்கள் அந்த பகுதியில் இரவு 10 மணி அளவில் ஒன்று கூடினார்கள்.

கும்மியடித்து கொண்டாட்டம்

பின்னர் திருமஞ்சனத்தில் விநாயகர் உருவத்தை பிடித்தனர். அதன்பின்னர் பழம், தேங்காயுடன் சர்க்கரை பாகு கலந்து மாவிளக்கையும், ஒவ்வொருவரும் தாங்கள் கொண்டு வந்த உணவு பதார்த்தங்களையும் விநாயகர் முன்பு வைத்து படைத்து வழிபட்டனர்.

அதைத்தொடர்ந்து நிலாவை விநாயகராக பாவித்து அதை பூமிக்கு அழைக்கும் விதமாக பெண்கள் வட்டமாக நின்று ஆடி, பாடி கும்மியடித்தார்கள். விடிய, விடிய இந்த கொண்டாட்டம் நடந்தது. அப்போது அனைத்து நிலைகளிலும் இயற்கை மக்களுக்கு சாதகமான ஒரு நிலையை கொண்டு வர வேண்டும் என வேண்டிக்கொண்டனர்.

நன்றி செலுத்தினர்

இந்த நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் வாழை மட்டையால் தயாரிக்கப்பட்ட தேரில் விநாயகரை வைத்து பவானி காவிரி ஆற்றுக்கு கொண்டு சென்றனர். பின்னர் விநாயகரை ஆற்றில் விட்டு கரைத்து நீராடிவிட்டு நிலாவுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர். காலை 4.30 மணி அளவில் சூரியனை வழிபட்டு தாங்கள் கொண்டு வந்திருந்த உணவு பதார்த்தங்களை ஒருவருக்கொருவர் கொடுத்து உண்டு மகிழ்ந்தனர்.

கிராமப்புறங்களில் மட்டுமே நடைபெற்று வந்த இந்த நிலா பிள்ளையார் நிகழ்ச்சி தற்போது பவானி மற்றும் சுற்றுவட்டாரத்தில் சமீபகாலமாக அதிக இடங்களில் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்