ஆப்பக்கூடல் ஓங்காளியம்மன் குண்டம் திருவிழா; ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர்
ஆப்பக்கூடல் ஓங்காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர்.;
அந்தியூர்
ஆப்பக்கூடல் ஓங்காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர்.
குண்டம் திருவிழா
அந்தியூர் அருகே ஆப்பக்கூடல் கரட்டுப்பாளையத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதும் புகழ்பெற்றதுமான ஓங்காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஜனவரி மாதம் குண்டம் திருவிழா மிக விமர்சையாக கொண்டாடப்படும்.
அதேபோல இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி பூச்சாட்டு்தலுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து கொடியேற்றப்பட்டது. முன்னதாக பக்தர்கள் ஆப்பக்கூடல் பவானி ஆற்றில் இருந்து மேளதாளங்கள் முழங்க காவடி எடுத்துக் கொண்டும், தீர்த்த குடம் எடுத்து கொண்டும் வந்தனர்.
தீ மிதித்தனர்
நேற்று காலை குண்டம் கண் திறக்கப்பட்டு 60 அடி நீளத்துக்கு குண்டம் தயார் செய்யப்பட்டது. பின்னர் குண்டத்துக்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டன. முதலில் பூஜைகள் செய்து பூசாரி குண்டம் இறங்கி தொடங்கி வைத்தார்.
அவரை தொடர்ந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயபக்தியுடன் மஞ்சள் மற்றும் வெள்ளை நிற ஆடை அணிந்து கொண்டும், கையில் பிரம்பில் பூ சூட்டிக்கொண்டும் "அம்மா தாயே காப்பாற்று" என கோஷம் எழுப்பியபடி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு குண்டம் இறங்கினார்கள்.
பொங்கல் வைத்து வழிபாடு
மேலும் பெண்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து சாமிக்கு படைத்தனர். தொடர்ந்து மாவிளக்கு எடுத்துக் கொண்டு மேளதாளங்கள் முழங்க கோவிலை சுற்றி வந்தனர்.
திருவிழாவில் ஆப்பக்கூடல், புதுப்பாளையம், சுக்காநாயக்கனூர், ஓசைபட்டி, முனியப்பன்பாளையம், வேம்பத்தி, வெள்ளாளபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர் 14-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழா மற்றும் வீதி உலா நடைபெற உள்ளன. திருவிழாவையொட்டி ஆப்பக்கூடல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.