14 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்: கொத்தனாருக்கு 25 ஆண்டு சிறை:நாகர்கோவில் போக்சோ கோர்ட்டு தீர்ப்பு
14 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொத்தனாருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் போக்சோ கோா்ட்டு தீர்ப்பு வழங்கியது.
நாகர்கோவில்,
14 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொத்தனாருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் போக்சோ கோா்ட்டு தீர்ப்பு வழங்கியது.
கொத்தனார்
களியக்காவிளை அருகே உள்ள குளப்புறம் கல்வெட்டான்குழி வீடு பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட் (வயது 55), கொத்தனார். இவர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வந்தார்.
குமரி மாவட்டம் குமாரபுரம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் தாயாருடன் வசித்து வந்தார். சிறுமியின் தந்தை ஏற்கனவே இறந்து விட்டார். சிறுமியின் தந்தையும் வின்சென்டும் நண்பர்கள்.
இந்த நிலையில் வின்சென்ட் சிறுமியின் தாயாரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். பின்னர் தன்னை இறந்துபோன கணவரின் நண்பர் என்று அந்த பெண்ணிடம் அறிமுகம் செய்து கொண்டு பேசியுள்ளார். மேலும் சிறுமியிடமும் தினமும் செல்போனில் பேசி வந்தார். அப்போது வின்சென்ட் சிறுமியிடம் 'எனது மகன் ஜெர்மனியில் கலெக்டராக இருக்கிறான். உன்னை அவனுக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறேன்' என்று கூறினார்.
சிறுமி பலாத்காரம்
இதுபோன்ற பல்வேறு ஆசை வார்த்தைகள் கூறி தினமும் செல்போனில் சிறுமியிடம் பேசி வந்தார். இந்த நிலையில் கடந்த 2-5-2021 அன்று வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம், 'எனது மகனை சந்திக்க என்னுடன் நீ வர வேண்டும்' என கூறி கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு அந்த சிறுமியை கடத்தி சென்றார்.
அங்கு வாடகை வீட்டில் தங்க வைத்து 2 நாட்கள் சிறுமியை மிரட்டி வின்சென்ட் பாலியல் பலாத்காரம் செய்தார். இதற்கிடையே சிறுமி மாயமானதை தொடர்ந்து தாயார் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது அவரை வின்சென்ட் கடத்தி சென்றது தெரியவந்தது. தொடர்ந்து வின்சென்டின் செல்போன் சிக்னல் மூலம் அவரை எர்ணாகுளத்தில் வைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். அத்துடன் சிறுமியையும் போலீசார் மீட்டனர். பின்னர் வின்சென்ட் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
25 ஆண்டு சிறை
இந்த வழக்கு நாகர்கோவில் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜோசப் ஜாய் நேற்று தீர்ப்பு கூறினார். தீர்ப்பில் குற்றவாளியான வின்சென்டிற்கு 25 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.53 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.