கோத்தகிரி காட்டிமா அணி இறுதி போட்டிக்கு தகுதி
மாவட்ட கிரிக்கெட் போட்டியில் கோத்தகிரி காட்டிமா அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான ஏ, பி மற்றும் சி டிவிஷன் கிரிக்கெட் போட்டிகள் கோத்தகிரி காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் நேற்று சி டிவிஷன் பிரிவிற்கான 2-வது அரையிறுதி போட்டியில் கோத்தகிரி காட்டிமா அணியும், ஊட்டி புளூமவுண்டன் கிங்ஸ் அணியும் மோதியது. போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கோத்தகிரி காட்டிமா அணி நிர்ணயிக்கப்பட்ட 35 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 320 ரன்களை குவித்தது. இந்த அணி வீரர் யஷ்வந்த் 9 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்சர்கள் விளாசி 111 ரன்கள் எடுத்தார். மதன்குமார் 86 ரன்கள், ஆனந்தராஜ், ராஜிவ் ஆகியோர் தலா 28 ரன்கள் எடுத்தனர்.
தொடர்ந்து விளையாடிய ஊட்டி புளூமவுண்டன் கிங்ஸ் அணி 27.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த அணி வீரர்கள் அப்துல் ரசாக் 40 ரன்கள், சிக்கு 34 ரன்கள், மணிகண்டன் 28 ரன்கள் எடுத்தனர். இந்த போட்டியில் 142 ரன்கள் வித்தியாசத்தில் கோத்தகிரி காட்டிமா அணி அபார வெற்றி பெற்றதுடன், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதி போட்டியில் கோத்தகிரி காட்டிமா அணியும், கூடலூர் தாலூர் நீலகிரி கல்லூரி அணியும் மோதுகிறது.