கோத்தகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது
பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியதால், கோத்தகிரி அருகே கோடநாடு காட்சி முனைக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.
கோத்தகிரி,
பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியதால், கோத்தகிரி அருகே கோடநாடு காட்சி முனைக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.
கோடநாடு காட்சி முனை
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களில் கோடநாடு காட்சி முனையும் முக்கிய சுற்றுலா தலமாகும். நீலகிரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் கோத்தகிரியில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவிலும், கடல் மட்டத்தில் இருந்து 6,500 அடி உயரத்தில் உள்ள கோடநாடு காட்சி முனைக்கு சென்று வருகின்றனர்.
அங்குள்ள காட்சி முனையில் தொலைநோக்கி மூலமாக தாழ்வான பகுதியில் உள்ள பவானிசாகர் அணைக்கட்டு, தெங்குமரஹாடா, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட சமவெளி பகுதிகள், ரங்கசாமி மலை, மேற்கு தொடர்ச்சி மலை போன்ற இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர். இந்த காட்சிமுனை கோத்தகிரி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
வருகை குறைவு
கோத்தகிரி பகுதியில் கடந்த சில வாரங்களாக தொடர் மழை பெய்து வந்தது. இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக மழை பெய்யாமல், வெயிலுடன் கூடிய இதமான சீதோஷ்ண காலநிலை நிலவி வருகிறது. இதனால் வார விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கோடநாடு காட்சி முனைக்கு வருகை தந்து கண்டு ரசித்தனர்.
இந்தநிலையில் தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று முதல் தொடங்கியது. இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்குகிறது. இதனால் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை கணிசமாக குறைந்து உள்ளது. மேலும் வார இறுதி விடுமுறை நாட்களாக இருப்பினும், கடந்த 2 நாட்களாக கோடநாடு காட்சி முனையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருந்தது. இருப்பினும், அவர்கள் இயற்கை காட்சிகளை கண்டு ரசித்ததுடன், செல்பி, புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.