கொப்பரை தேங்காய் கொள்முதல் 30-ந் தேதி வரை நீட்டிப்பு

Update:2022-09-01 22:04 IST


பொங்கலூர், காங்கயம், பெதப்பம்பட்டி, உடுமலையில் கொப்பரை தேங்காய் கொள்முதல் வருகிற 30-ந் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் வினீத் அறிவித்துள்ளார்.

கொப்பரை தேங்காய் கொள்முதல்

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும், வருவாயை பெருக்கவும் தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. தென்னை சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவர்கள் விளைவித்த தேங்காய் கொப்பரையை விலை ஆதரவு திட்டத்தின் கீழ், நிர்ணயிக்கப்பட்ட தரம், அளவு கொண்ட அரவை தேங்காய் கொப்பரை கிலோ ரூ.105.90-க்கும், பந்து தேங்காய் கொப்பரை கிலோ ரூ.110-க்கும் கொள்முதல் செய்ய மத்திய அரசின் நாபெட் நிறுவனம் உத்தரவிட்டது. அதன்படி கடந்த ஜூலை மாதம் 31-ந் தேதி வரை 3 ஆயிரத்து 498 விவசாயிகளிடம் இருந்து ரூ.45 கோடியே 37 லட்சத்துக்கு கொள்முதல் செய்யப்பட்டது.

இந்தநிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வருகிற 30-ந் தேதி வரை கொப்பரை கொள்முதல் செய்ய காலநீட்டிப்பு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இந்த திட்டத்தின்படி பொங்கலூர், காங்கயம், பெதப்பம்பட்டி, உடுமலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொள்முதல் செய்யப்படுகிறது.

வங்கிக்கணக்கில் வரவு

இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் நிலத்தின் சிட்டா அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கிக்கணக்கு ஆகிய விவரங்களுடன் தங்கள் பகுதி ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளரை தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம். பொங்கலூர் விற்பனை கூடத்தை 99424 20525 என்ற எண்ணிலும், காங்கயத்தை 63835 96209 என்ற எண்ணிலும், பெதப்பம்பட்டியை 97109 21187 என்ற எண்ணிலும், உடுமலையை 99409 19150 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். தேங்காய் கொப்பரைக்கு உரிய தொகை, விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். கொப்பரை கொள்முதல் திட்டத்தில் தென்னை விவசாயிகள் அதிக அளவில் பங்கேற்று பயன்பெறலாம்.இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்