கூவாகம் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

கூத்தாண்டவர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்;

Update:2024-04-24 14:38 IST

உளுந்தூர்பேட்டை,

கூவாகம் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.3-ம் பாலினமாக கருதப்படும் திருநங்கைகள், குலதெய்வமாக வணங்கும் கூத்தாண்டவர் கோவில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் உள்ளது.மிகவும் பிரசித்தி பெற்றதும், பழமைவாய்ந்ததுமான கூத்தாண்டவர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 18 நாட்கள் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இத்திருவிழாவில் திருநங்கைகள் ஆயிரக்கணக்கில் கலந்துகொள்வார்கள்.

இந்த திருவிழாவிற்கென்று ஒரு வரலாறு உண்டு. மகாபாரத போரில் பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் போர் மூண்டபோது பாண்டவர்கள் வெற்றிபெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தனர். அப்படிப்பட்ட சூழலில் பாண்டவர்கள் வெற்றி பெற 32 சாமுத்திரிகா லட்சணம் பொருந்திய ஆண்மகனை பலி கொடுக்க வேண்டும். இதற்கு தகுதியானவர்கள் கிருஷ்ணன், அர்ஜூனன், அரவாண் ஆகிய 3 பேர் மட்டுமே இருந்த நிலையில் கிருஷ்ணனையும், அர்ஜூணனையும் பலி கொடுக்க முடியாத நிலையில் அரவாணிடம் இதுகுறித்து கேட்டபோது அவர் ஒப்புக்கொண்டார்.

ஆனால் அரவாண் ஒரு நிபந்தனை விதித்தார். அதாவது தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் எனவும் அதனால் தாம்பத்திய உறவும் தேவை எனக்கூறினார். விடிந்தால் பலியாகப்போகும் ஒருவனுக்கு யார் பெண் கொடுப்பார்கள் என்று எண்ணியிருந்த சூழலில்தான், கிருஷ்ணன் மோகினி அவதாரம் எடுத்து பெண்ணாக உருமாறினார். உடனே அரவாணுக்கு திருமணம் நடந்தது. அதன் பின்பு இரவு முழுவதும் கணவன்- மனைவியாக வாழ்ந்த அரவாண் அதிகாலை களப்பலி கொடுக்கப்பட்டார். அதன் பிறகுதான் பாண்டவர்கள் வெற்றி பெற்றார்கள். அதனால் கிருஷ்ணனின் மறு அவதாரமாக தங்களை பாவித்துக்கொண்டு அரவாணை தங்களது கணவராக ஏற்று திருநங்கைகள், கோவில் பூசாரி கையால் தாலி கட்டிக்கொண்டு இரவு முழுவதும் ஆடிப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொள்வார்கள்.

இத்தகைய சிறப்புமிக்க இந்த திருவிழா கடந்த 9-ந் தேதி மாலை சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து 10-ந் தேதி மாலை பந்தலடி தெய்வநாயகம் செட்டியார் தோப்பில் பாரதம் ஆரம்பம் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் 11-ந் தேதி முதல் 22- ந் தேதி வரை ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகளும், இரவில் சாமி திருவீதி உலாவும் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் மாலை சாமி திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி ஆயிரக்கணக்கான திருநங்கைகள், புதுமணப் பெண்கள்போல் அலங்கரித்துக்கொண்டு கூத்தாண்டவர் கோவிலுக்கு வந்து அரவாணை தங்கள் கணவனாக பாவித்துக்கொண்டு கோவில் பூசாரி கையால் தாலி கட்டிக்கொண்டனர்.

அதன் பிறகு கோவிலில் இருந்து வெளியே வந்த திருநங்கைகள், கோவில் வளாகத்தில் கற்பூரம் ஏற்றி கும்மியடித்து கூத்தாண்டவரை வழிபட்டனர். மேலும் இரவு முழுவதும் விடிய, விடிய நடனமாடியும், கும்மியடித்தும் ஆடிப்பாடி உற்சாகமடைந்தனர்.

விழாவின் 16-வது நாள் நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை கோவிலில் உள்ள அரவாண் சிரசுக்கு முதல் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன் பிறகு காலை 8 மணியளவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரானது கோவிலின் 4 மாட வீதிகள் வழியாக பக்தர்களின் வெள்ளத்தில் ஆடி, அசைந்தபடி வந்தது. பின்னர் அந்த தேர், மதியம் நத்தம் கிராம பந்தலுக்கு தேர் வந்தடைந்ததும் அங்கு அரவாண் களப்பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது திருநங்கைகள் தங்கள் தலையில் சூடியிருந்த பூக்களை பிய்த்து எறிந்து, நெற்றியில் உள்ள குங்கும பொட்டை அழித்து வெள்ளைச்சேலை அணிந்து விதவைக்கோலம் பூண்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் ஒன்றுகூடி ஒப்பாரி வைத்து அழுதனர். பின்னர் மாலையில் திருநங்கைகள் அனைவரும் கூவாகத்தில் இருந்து புறப்பட்டு தங்கள் சொந்த ஊருக்கு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்