கொம்பன்குளம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டம் ஆய்வு
கொம்பன்குளம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தை அதிகாரி ஆய்வு செய்தார்.
தட்டார்மடம்:
கொம்பன்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை சிற்றுண்டித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இங்கு கலெக்டரின் நேர்முக உதவியாளர்(சத்துணவு பிரிவு) ஹேமலதா வந்தார். அவர் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டி தரமாக வழங்கப்படுகிறதா? என ஆய்வு செய்தார். அவருடன் சாத்தான்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மு.பாலசுப்பிரமணியன் ஆகியோரும் சென்றிருந்தனர். அப்போது, பள்ளிக்கூடத்தின் ஓட்டு வகுப்பறைக் கட்டிடம் மழைக்காலங்களில் தண்ணீர் கசிந்து பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், மேற்கூரையை பழுது நீக்கித் தரவும், பள்ளியில் போதிய இடவசதி இருப்பதால் புதிய வகுப்பறைக் கட்டிடம் கட்டித் தரவும் பள்ளி தலைமை ஆசிரியர் ஆல்வின் கோரிக்கை விடுத்தார். வகுப்பறை கட்டிடத்தின் மேற்கூரையை விரைவில் பழுதுநீக்குவதாகவும், அடுத்த நிதியாண்டில் புதிய வகுப்பறைக் கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்படும் எனவும் வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதி அளித்தார்.