கொளத்தூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி - 800 பேர் கைது

கொளத்தூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 800 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-09-21 10:43 IST

மின்சார வாரியத்தில் கேங்மேன் எனப்படும் களப்பணியாளர்கள் பணியிடத்துக்காக 2019-ம் ஆண்டு நடந்த எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வில் 15 ஆயிரம் பேர் பங்கேற்றனர். 2020-ம் ஆண்டு வௌியான தேர்வு முடிவில் 9613 பேர் தேர்வானார்கள். அதில் 5,493 பேருக்கு இதுவரையிலும் பணி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

தங்களை விட குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு பணி வழங்கப்பட்ட நிலையில் அதிக மதிப்பெண் பெற்ற தங்களுக்கு ஏன் இன்னும் வழங்கப்படவில்லை? என்று கூறி பல்வேறு போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் சென்னை பெரவள்ளூரில் நேற்று காலை மின்வாரிய கேங்மேன் தேர்வில் தேர்ச்சி பெற்ற 800-க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் குடு்ம்பத்துடன் ஒன்று கூடினர். பின்னர் அனைவரும் கொளத்தூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். முன்னெச் சரிக்கையாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த துணை கமிஷனர்கள் சக்திவேல், ஈஸ்வரன் மற்றும் ரோஹித் நாதன் தலைமையிலான போலீசார், அவர்களை தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லும்படி கேட்டுக்கொண்டனர். அதற்கு அவர்கள் மறுத்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 800 பேரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்