கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: விசாரணைக்கு ஆஜராக கோத்தகிரியைச் சேர்ந்த 3 பேருக்கு சம்மன்-சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்கு ஆஜராக கோத்தகிரியைச் சேர்ந்த 3 பேருக்கு சம்மன் அனுப்பி சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளார்கள்.
கோத்தகிரி
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்கு ஆஜராக கோத்தகிரியைச் சேர்ந்த 3 பேருக்கு சம்மன் அனுப்பி சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளார்கள்.
கொலை, கொள்ளை வழக்கு
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல் -அமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோருக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் உள்ளது. இங்கு கடந்த 2017-ம் ஆண்டு எஸ்டேட் காவலாளி ஓம் பகதூரைக் கொலை செய்து விட்டு உள்ளே புகுந்த மர்ம கும்பல், பங்களாவில் இருந்த பொருட்களைக் கொள்ளையடித்து விட்டு சென்றது. இதுதொடர்பாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த சயான், வாளையாறு மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் வழக்கை தீர விசாரித்து உண்மையைக் கொண்டு வர கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதையடுத்து 230-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. கடந்்த ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவிட்டார்.
3 பேருக்கு சம்மன்
அதன் பின்னர் சி.பி.சி.ஐ.டி போலீசார் தங்களது விசாரணையைத் தொடங்கினர். இந்தநிலையில் நேற்று காலை கோத்தகிரி வந்த சி.பி.சி.ஐ.டி போலீசார் கோடநாடு வழக்கு சம்பந்தமான ஆவணங்களை மலையாள மொழியில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்ப்பது சம்பந்தமாகவும், வழக்கு குறித்து விசாரணை மேற்கொள்வதற்காகவும் மணிகண்டன், கர்சன் செல்வம் மற்றும் ஜெயசீலன் ஆகிய 3 பேருக்கு, கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் வருகிற 7-ந் தேதி காலை 10 மணிக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் வழங்கி விட்டு சென்றனர்.
இதே போல கோடநாடு அருகே உள்ள காட்சி முனைப் பகுதியில் வசித்து வரும் 2 பேருக்கு ஏற்கனவே சம்மன் வழங்கப்பட்டு, அவர்களிடம் நேற்று முன்தினம் காலை கோவையில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இம்மாத இறுதியில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுவதற்காக தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ள நிலையில், சி.பி.சி.ஐ.டி போலீசார் கோடநாடு வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.