கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் முறிந்து விழுந்த மரம்:போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் மரம் முறிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-05-07 18:45 GMT

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் தற்போது குளு, குளு சீசன் நிலவுகிறது. இதனை அனுபவிக்க தினந்ேதாறும் ஏராளமான பயணிகள் வாகனங்களில் வருகை தருகின்றனர். இதில் பெரும்பாலான வாகனங்கள் கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதை வழியாக செல்கின்றன. இதற்கிடையே கடந்த 10 நாட்களாக கொடைக்கானல் மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணி அளவில் கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் டம்டம் பாறை அருகே சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்தது.

சாலையில் ஒரு பஸ் செல்லும் வகையில் இடம் இருந்தது. அப்போது அந்த வழியாக கொடைக்கானலில் இருந்து கேரளா சென்ற பஸ் செல்ல முயன்றது. இதில் எதிர்பாராதவிதமாக மரத்தின் கொப்புகள் பஸ்சில் சிக்கி கொண்டது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வத்தலக்குண்டு நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் வீரணன், இளநிலை பொறியாளர் தாமரை மாறன் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் சாலையில் விழுந்த மரத்தை வெட்டி அகற்றினர். இந்த சம்பவத்தால் அந்த மலைப்பாதையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்