கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டிய விவகாரம்: நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபிசிம்ஹாவுக்கு நோட்டீஸ்

கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டிய விவகாரத்தில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபிசிம்ஹாவுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஒருவாரத்தில் ஆவணங்களை சமர்ப்பிக்க அதில் உத்தரவிடப்பட்டு உள்ளது.

Update: 2023-08-25 20:45 GMT

கொடைக்கானல்,

கொடைக்கானலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பேத்துப்பாறை கிராம தலைவர் மகேந்திரன் புகார் ஒன்றை தெரிவித்தார். அதாவது, கொடைக்கானல் தாலுகா வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பேத்துப்பாறையில் நடிகர் பாபிசிம்ஹாவும், பாரதி அண்ணாநகரில் நடிகர் பிரகாஷ்ராஜூவும் அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டி வருவதாகவும், பிரகாஷ்ராஜ் சிமெண்டு சாலை அமைத்துள்ளதாகவும் பரபரப்பு புகாரை தெரிவித்தார்.

அதன்பேரில், வருவாய்த்துறை, ஊராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள், நடிகர்கள் கட்டி வரும் கட்டிடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

நடிகர்களுக்கு நோட்டீஸ்

இதில் நடிகர் பாபிசிம்ஹா கட்டியுள்ள கட்டிடத்திற்கு அவரது தாய் கிருஷ்ணகுமாரி பெயரில் கடந்த 2019-ம் ஆண்டு 2,500 சதுர அடி நிலம் வாங்கப்பட்டுள்ளது. அதில், கட்டிடம் கட்டுவதற்கும் அனுமதி பெறப்பட்டுள்ளது தெரியவந்தது. ஆனால் கட்டிடம் கட்ட உரிய காலம் முடிவடைந்த பின்னரும் கட்டிடம் கட்டி முடிக்கப்படாத நிலையில், கூடுதல் நிலத்தில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து பாபிசிம்ஹாவின் தந்தை ராமகிருஷ்ணனிடம் வில்பட்டி ஊராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதேபோல் பாரதி அண்ணாநகரில் நடிகர் பிரகாஷ்ராஜ் எந்தவித அனுமதியும் இன்றி கட்டிடம் கட்டியதுடன், அந்த கட்டிட பகுதிக்கு செல்ல சாலை அமைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்க முடிவு செய்தனர். ஆனால் அங்கு அவர் இல்லை. இதனால் அவரது கட்டிட மேலாளரும், பாபிசிம்ஹாவின் அண்ணனுமான பாபுஜியிடம் அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர்.

ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவு

நடிகர்களுக்கு வழங்கப்பட்ட நோட்டீசில், கட்டிட அனுமதி இன்றி புதிய வீடு கட்டப்பட்டு வருவதாக தெரிய வருகிறது. எனவே அதற்கான அனைத்து ஆவணங்களையும் ஒருவார காலத்துக்குள் வில்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் உள்ளாட்சி சட்ட விதிகள்படி மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்