அவியல் செய்யவும் தெரியும், அரசியல் செய்யவும் தெரியும் - கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பரபரப்பு பேச்சு

பெண்கள் அதிகமாக அரசியலுக்கு வரவேண்டும் என்று தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

Update: 2024-01-06 14:22 GMT

மதுரை,

மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தெலுங்கானா கவர்னரும் புதுச்சேரி துணைநிலை கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

பாரதி சொல்லிய அக்கினிக்குஞ்சு ஒவ்வொரு பெண்ணிலும் உள்ளது. அவர்கள் குழந்தைகளை பெற்றெடுக்கிறார்கள். இதைவிட வலிமையான ஒரு உதாரணம் வேறு எங்கேயும் சொல்ல முடியாது. எவ்வளவு வலிகளைத் தாங்கிக் கொள்கிறாளோ, அவ்வளவு வலிமையானவள் என்பதை குழந்தைப்பேறு நமக்குச் சொல்லிக் கொடுக்கிறது. குழந்தைகளை வளர்ப்பதைப் போல பெண்கள், நிர்வாகத்தில் சிறந்தவர்களாக இருக்கிறார்கள்.

எங்கள் வீட்டில் என் மனைவி அரசாளுகிறாள். அதனால் எங்கள் வீட்டில் ஒரு பிரச்சனையும் இல்லை என்று பாரதிதாசன் சொல்வதைப் போல, மாநிலத்தில் பெண்கள் எல்லாம் அரசியலைக் கையாண்டால், அந்த மாநிலத்தில் பிணியில்லை, பழியில்லை. பெண்கள் அதிகமாக அரசியலுக்கு வரவேண்டும்.

அரசியலுக்கு வரும்போது, வீட்டை நிர்வகிக்க தெரிந்த பெண்களால், நிச்சயமாக நாட்டை நிர்வகிக்க முடியும். அவியலும் எங்களுக்கு செய்யத் தெரியும் அரசியலும் எங்களுக்கு செய்யத் தெரியும் என்பதை உணர்த்துவதுதான் நீங்கள். அவியல் செய்கிற நம்மால் அரசியல் செய்ய முடியும். அரசியல் செய்கிறவர்களால் அவியல் செய்ய முடியுமா? முடியாது. எல்லா திறமையும் நம் கையில் இருக்கிறது.

அரசியல் என்றால் உடனே ஒரு கட்சியில் குதித்து நிர்வாகியாக வேண்டும், தலைவராக வேண்டும் என்று இல்லை. சுய உதவிக் குழுக்களில் சேர்ந்து நான்கைந்து பெண்களுக்கு உதவி செய்து, நான்கைந்து குழந்தைகளின் படிப்புக்கு உதவி செய்து, அவர்கள் லோன் பெறுவதற்கு உதவி செய்வது இதெல்லாம் கூட பொதுவாழ்வுதான்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்