கட்சி பகையால் கொல்லப்பட்டாரா? ஜெயக்குமார் எழுதிய புகார் கடிதம் வெளியானது- அதிர்ச்சி தகவல்கள்
நெல்லை காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் தனசிங் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.;
நெல்லை ,
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எரிந்த நிலையில் சடலமாக இன்று மீட்கப்பட்டுள்ளார். 2 நாட்களாக மாயமானதாக குடும்பத்தினர் உவரி காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் எரிந்த நிலையில் ஜெயக்குமார் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டாரா ? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதனிடையே, காணாமல் போன ஜெயக்குமார் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக கடந்த மாதம் 30-ஆம் தேதி போலீசில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில், இரவு நேரத்தில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதாகவும் நெல்லை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசனுக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.
மரண வாக்குமூலம் எனக் குறிப்பிட்டு மிரட்டல் விடுத்த நபர்களின் பெயர்கள், தொலைப்பேசி எண்கள் ஆகியவற்றையும் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளர். கட்சிக்காக பல லட்சங்களை செலவு செய்ததற்காக, அரசு ஒப்பந்தங்களை பெற்று தருவதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் வாக்குறுதி கொடுத்ததாக அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாடாளுமன்ற தேர்தலில் பல லட்சங்களை செலவு செய்ததாகவும், பணத்தை திருப்பி கேட்ட போது கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், தன்னிடம் வாங்கிய பணத்திற்காக நிலத்தை எழுதிக் கொடுத்த ஒருவர் மும்பை ரவுடிகளை வைத்து கொலை மிரட்டல் விடுப்பதாகவும் எஸ்.பிக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.
நெல்லை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைத்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கட்சி பகையால் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்று ஜெயக்குமார் தனசிங்கின் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்