தக்கலை அருகே பரபரப்பு சம்பவம்: வீட்டு முன் விளையாடிய பெண் குழந்தை கடத்தல்; முதியவர் அதிரடி கைது

தக்கலை அருகே வீட்டு முன்பு விளையாடிய பெண் குழந்தையை கடத்திய முதியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-02-03 18:36 GMT

தக்கலை, 

தக்கலை அருகே வீட்டு முன்பு விளையாடிய பெண் குழந்தையை கடத்திய முதியவரை போலீசார் கைது செய்தனர்.

என்ஜினீயர் குழந்தை

குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள மணலி கரைகண்டார் கோணத்தில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன் (வயது 60), ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி திலகவதி (60).

இவர்களுடைய மகள் அகிலா (30) சென்னைகுரோம்பேட்டையில் கணவர் கண்ணனுடன் (35) வசித்து வருகிறார். அகிலாவுக்கு 6 வயதில் நிஷ்வந்த் என்ற மகனும், 2 வயதில் சஷ்விகா என்ற 2 வயது பெண் குழந்தையும் உள்ளனர். என்ஜினீயரான கண்ணன் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

வீட்டு முன் விளையாடியது

இந்தநிலையில் உறவினரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க அகிலா குடும்பத்துடன் தந்தை பாலகிருஷ்ணன் வீட்டுக்கு வந்தார். நேற்று காலையில் அருகில் உள்ள உறவினரின் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு அனைவரும் சென்று விட்டு மதியம் வீட்டில் ஓய்வெடுத்தனர்.

அப்போது குழந்தை சஷ்விகா அங்குமிங்கும் ஓடியாடி விளையாடியபடி இருந்தது. ஒரு கட்டத்தில் குழந்தை வீட்டுக்குள் இருந்து வெளியேறி தெருவுக்கு வந்தது.

இதனை கவனித்த பாட்டி திலகவதி, குழந்தையின் பின்னாலேயே வந்துள்ளார். மோட்டார் சைக்கிள் செல்லும் அளவில் தெரு குறுகலானது. அந்த தெருவில் வீட்டில் இருந்து சுமார் 30 அடி தூரத்தில் குழந்தை விளையாடி கொண்டிருந்தது.

திடீர் மாயமானதால் பதற்றம்

அந்த சமயத்தில் செருப்பு போடுவதற்காக திலகவதி வீட்டுக்கு வந்தார். அங்கு செருப்பை அணிந்ததும் உடனே குழந்தையை பார்க்க புறப்பட்டார். ஆனால் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை மாயமாகியிருந்தது.

உடனே பதற்றம் அடைந்த அவர் குழந்தையை காணவில்லை என சத்தம் போட்டார். இதனை கேட்டு குடும்பத்தினரும், அக்கம் பக்கத்தினரும் ஓடி வந்தனர். அருகில் உள்ள வீடு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் தேடியும் குழந்ைத கிடைக்கவில்லை.

போலீசார் தேடுதல் வேட்டை

மேலும் இதுகுறித்து தக்கலை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். போலீசாரும் அந்த பகுதியில் விசாரித்தும் எந்தவொரு தகவலும் இல்லை. இதனால் நேரம் செல்ல, செல்ல அங்கு பதற்றம் அதிகரித்தது.

இதற்கிடையே வீட்டு முன்புள்ள ஒரு கிணற்றில் விழுந்து இருக்குமோ? என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தக்கலை தீயணைப்பு நிலைய வீரர்களை வரவழைத்து அங்கு தேடுதல் வேட்டை நடந்தது. அதே சமயத்தில் கிணற்றில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் பணியும் நடந்தது.

துப்பு கிடைத்தது

இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு இடையே அங்கு விரைந்த தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி, சம்பவம் நடந்த பகுதியில் உள்ள 5 தெருக்களில் வீடுகள்தோறும் சோதனை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டார்.

உடனே தனித்தனி குழுக்களாக பிரிந்து வீடுகளில் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது குழந்தை காணாமல் போன இடத்தில் இருந்து சுமார் 750 மீட்டர் தூரத்தில் உள்ள வீடுகளில் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசோபன் மற்றும் போலீசார் விசாரித்த போது துப்பு கிடைத்தது. அதாவது ஒருவர் குழந்தையுடன் தெருவில் நடந்து சென்ற விவரம் தெரியவந்தது. மேலும் அந்த நபர் யாரென்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

குழந்தை மீட்பு

உடனே அந்த வீட்டுக்குள் போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அங்கு 2 வயது குழந்தை சஷ்விகா கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தாள். உடனே அந்த குழந்தையை சப் -இன்ஸ்பெக்டர் சத்திய சோபன் மீட்டார். அதே சமயத்தில் அங்கு குழந்தையை கடத்திய நபரை இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மடக்கி பிடித்தார்.

பிறகு மீட்கப்பட்ட குழந்தையை போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். குழந்தை கிடைத்த சந்தோசத்தில் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் திக்குமுக்காடினர். குழந்தையை முத்தமிட்டு தாய் அகிலா பெற்று கொண்டார்.

நகைக்காக...

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், குழந்தையை கடத்தியவர் ராஜப்பன் ஆசாரி (70) என்பது தெரியவந்தது. விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சஷ்விகா கழுத்தில் நகையும், காதில் கம்மலும் அணிந்திருந்தார்.

இதனை அந்த வழியாக சென்ற ராஜப்பன் பார்த்து குழந்தையை கடத்தி சென்றுள்ளார். குழந்தையின் அருகில் யாரும் இல்லை என்பதை கண்காணித்து அவர் கடத்தியுள்ளார்.

ராஜப்பன் தூக்கிச் சென்ற போது குழந்தை அழவில்லை. ராஜப்பன் தன்னுடைய தெருவில் குழந்தையை தூக்கிச் சென்ற போது அங்குள்ளவர்கள் பார்த்துள்ளனர். அப்போது ராஜப்பனின் உறவினருக்கு சொந்தமான குழந்தையாக இருக்கும் என நினைத்துள்ளனர். போலீசார் சோதனை செய்த போது தான் அவர்களுக்கு ராஜப்பன் மீது சந்தேகம் ஏற்பட்டு தகவலை தெரிவித்துள்ளனர்.

குழந்தை அணிந்திருந்த நகைக்காக ராஜப்பன் கடத்தியுள்ளார். அவர் வசித்த வீட்டில் தனியாக இருந்துள்ளார். மரவேலைக்கு சென்று விட்டு அதில் கிடைக்கும் பணத்தில் மது குடித்து விட்டு ஓட்டலில் சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜப்பனை கைது செய்தனர். குழந்தையை கடத்தியதாக முதியவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்