மார்த்தாண்டத்தில் பரபரப்பு சம்பவம்: 2 என்ஜினீயர்களை கடத்தி பணம் பறிப்பு வாலிபர் கைது; 4 பேரை போலீஸ் தேடுகிறது

மார்த்தாண்டத்தில் 2 என்ஜினீயர்களை கடத்திச்சென்று மிரட்டி பணம் பறித்ததாக வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2023-01-04 21:27 GMT

குழித்துறை:

மார்த்தாண்டத்தில் 2 என்ஜினீயர்களை கடத்திச்சென்று மிரட்டி பணம் பறித்ததாக வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

என்ஜினீயர்கள்

குமரி மாவட்டம் மஞ்சாலுமூடு நாரகத்தின் குழி பகுதியை சேர்ந்தவர்கள் ஜிஸ்னு (வயது 26), சுர்ஜித் (22). இவர்கள் இருவரும் பெங்களூருவில் உள்ள நிறுவனத்தில் என்ஜினீயர்களாக பணியாற்றி வருகிறார்கள்.

புத்தாண்டையொட்டி விடுமுறையில் ஊருக்கு வந்தனர். கடந்த 2-ந்தேதி அவர்கள் ஊரில் இருந்து மார்த்தாண்டம் படம்பபாறை பகுதியில் உள்ள நண்பர் வீட்டுக்கு சென்று இரவு தங்கினார்கள்.

கடத்தல்

பின்னர் அங்கிருந்து நேற்றுமுன்தினம் இரவு ஜிஸ்னு, சுர்ஜித் ஆகியோர் புறப்பட்டு 11 மணி அளவில் மார்த்தாண்டம் ஜங்ஷன் பகுதியில் நடந்து சென்றனர். அப்போது அங்கு 5 பேர் மதுகுடித்துக்கொண்டு இருந்தனர். அவர்கள் திடீரென்று எழுந்து வந்து ஜிஸ்னு மற்றும் சுர்ஜித் ஆகியோரை கத்தியை காட்டி மிரட்டிபணம் கேட்டனர். அதற்கு அவர்கள் தங்களிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளனர். அதைத்தொடர்ந்து அவர்களை 5 பேர் கும்பல் அருகில் உள்ள மலைப்பகுதிக்கு கடத்தி சென்றனர்.

பணம் பறிப்பு

பின்னர் அங்கு வைத்து அவர்களிடம் இருந்த ரூ.2 ஆயிரம் மற்றும் 2 செல்போன்களையும் அந்த கும்பல் பறித்தது. மேலும் ஜிஸ்னுவின் தந்தை ஷாஜனுக்கு போன் செய்து கூகுள் பே மூலம் ரூ.5 ஆயிரம் அனுப்பும்படி கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து அவர் நேற்று அதிகாலையில் ரூ.5 ஆயிரத்தை அனுப்பி வைத்துள்ளார். அதன்பின்னர் அதிகாலையில் ஜிஸ்னு மற்றும் சுர்ஜித் ஆகியோரை அந்த ஆசாமிகள் விடுதலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

அங்கிருந்து வெளியே வந்த ஜிஸ்னு மற்றும் சுர்ஜித் ஆகியோர் இந்த சம்பவம் குறித்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு வந்து புகார் செய்தனர். அதன்பேரில் 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

வாலிபர் கைது

அப்போது கிடைத்த தகவலின் பேரில் மார்த்தாண்டத்தை சேர்ந்த ஜெனால்டு (27) என்பவரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய மேலும் 4 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்