கந்துவட்டி கேட்டு மளிகை கடை உரிமையாளர் கடத்தல்

கந்துவட்டி கேட்டு மளிகை கடை உரிமையாளர் கடத்தப்பட்டதாகவும், அவரை மீட்டுத்தரக்கோரியும் அவரது மனைவி, விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி.யிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.

Update: 2022-07-08 16:37 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா எறையூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் அந்தோணிராஜ் மனைவி ஸ்டெல்லா பபிதா (வயது 23). இவர் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகத்தில் கொடுத்த ஒரு புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

எனது கணவர் மளிகை கடை நடத்தி வந்தார். எங்கள் கிராமத்தை சேர்ந்த 13 பேர் தனியார் நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் கந்துவட்டி வசூலித்து வந்ததோடு ஏலச்சீட்டும் நடத்தி வந்தனர். எனது கணவர் அந்தோணிராஜ், எங்களுடைய திருமணத்திற்கு முன்பே அவர்களிடம் கடன் வாங்கியிருந்தார். அந்த கடன் தொகையை சிறுக, சிறுக பல தவணைகளாக கொடுத்து முழுவதும் அடைத்து விட்டார்.

கந்துவட்டி கேட்டு கடத்தல்

ஆனால் எனது கணவர் வாங்கியிருந்த கடனுக்கு அவர்கள் வட்டிக்கு மேல் வட்டிபோட்டு எங்களுக்கு சொந்தமான வீடு, சரக்கு வாகனம், 2 கார்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறித்துவிட்டனர். நாங்கள் எல்லாவற்றையும் இழந்து வறுமையில் வாழ்ந்து வருகிற நிலையில் எனது கணவர் கடந்த மே மாதம் 10-ந் தேதி வேளாங்கண்ணிக்கு புறப்பட்டபோது அவரை கடத்திச்சென்று மேலும் ரூ.1½ கோடி தரும்படி கேட்டு அடித்து கொடுமை செய்து வருகின்றனர்.

தற்போது வரை அவரை எங்கு கடத்தி வைத்துள்ளனர் என்ற விவரம் தெரியாத நிலையில் பணம் கொடுக்கவில்லையென்றால் எங்கள் குடும்பத்தினர் அனைவரையும் கொலை செய்து விடுவதாக அவர்கள் மிரட்டல் விடுத்து வருகின்றனர். எனவே கந்துவட்டி கும்பலிடம் இருந்து எனது கணவரை மீட்டுத் தருவதோடு அவர்கள் 13 பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுப்பதோடு எங்கள் குடும்பத்திற்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். மனுவை பெற்ற டி.ஐ.ஜி. அலுவலக அதிகாரிகள், இதுகுறித்து டி.ஐ.ஜி.யின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்