பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கடத்தப்பட்ட ஆன்லைன் வர்த்தகர் மீட்பு
திருவெண்காடு பகுதியில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கடத்தப்பட்ட ஆன்லைன் வர்த்தகர் மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.;
திருவெண்காடு:
ஆன்லைன் வர்த்தகர் கடத்தல்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திருவெண்காடு அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் கவியரசன். ஆன்லைன் வர்த்தகர். இவர் தனது நண்பரான தஞ்சாவூரை சேர்ந்த ஸ்டீபன் செல்வகுமார் மூலம், தஞ்சாவூரை சேர்ந்த பாலகுமாரனிடம் ரூ.8 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ரூ 4 லட்சத்தை திருப்பி கொடுத்த கவியரசன் மீதி தொகையை கொடுக்காமல் இழுத்தடித்ததாக தெரிகிறது.
இந்தநிலையில் ஸ்டீபன் செல்வகுமார் தொலைபேசி மூலம் கவியரசனை தஞ்சாவூருக்கு அழைத்ததாக தெரிகிறது. இதன்பேரில் தஞ்சாவூருக்கு சென்ற கவியரசனை பைனான்சியர் பாலகுமாரன் உள்ளிட்டோர் கடத்திச் சென்றதாகவும், தொடர்ந்து கவியரசனின் மனைவி அனுசியா தேவிக்கு அவர்கள் போன் மூலம் தொடர்பு கொண்டு வாங்கிய கடன் தொகையை கொடுத்துவிட்டு கணவரை மீட்டு செல்லுமாறு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
2 பேர் கைது
இதனால் அதிர்ச்சி அடைந்த அனுசியா தேவி திருவெண்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பைனான்சியர் பாலகுமாரன், அவரது சகோதரர் பாலமுருகன், புதுக்கோட்டை அத்திவெட்டியை சேர்ந்த புகழேந்தி, மணிகண்டன், தஞ்சாவூர் ஸ்டீபன் செல்வகுமார் ஆகியோர் தஞ்சாவூரில் இருந்து கவியரசனை கடத்தி சென்று புதுக்கோட்டை மாவட்டம் அத்திவெட்டி அய்யனார் கோவில் அருகே அடைத்து வைத்து, அடித்து துன்புறுத்தியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் கவியரசனை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய புகழேந்தி மற்றும் ஸ்டீபன் செல்வகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் தலைமறைவான பைனான்சியர் பாலகுமாரன், பாலமுருகன், மணிகண்டன் ஆகியோரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.