மோட்டார் சைக்கிளில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

வெண்ணந்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த குற்ற புலனாய்வுதுறை போலீசார், ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-08-26 18:45 GMT

வாகன சோதனை

நாமக்கல் மாவட்டத்தில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் ஆங்காங்கே சோதனைகள் நடத்தி ரேஷன்அரிசி கடத்தல் மற்றும் பதுக்குதல் சம்பவத்தில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று நாமக்கல் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் வெண்ணந்தூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 மூட்டைகளுடன் வந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர்.

ரேஷன்அரிசி பறிமுதல்

விசாரணையில் அவர் வெண்ணந்தூரை சேர்ந்த நாகையன் (வயது35) என்பதும், ரேஷன்அரிசி மூட்டைகளை கடத்தி வருவதும் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், ஏற்கனவே கடத்தி அங்குள்ள மாரியம்மன் கோவில் அருகில் உள்ள வேப்பமரத்துக்கு அடியில் பதுக்கி வைத்திருந்த 1,190 கிலோ ரேஷன்அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, நாகையனை கைது செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்