தக்கலை அருகே மோட்டார் சைக்கிள் மீது கேரள அரசு பஸ் மோதல்; வாலிபர் பலி
தக்கலை அருகே மோட்டார் சைக்கிள் மீது கேரள அரசு பஸ் மோதியதில் வாலிபர் இறந்தார். நண்பர் படுகாயம் அடைந்தார்.
தக்கலை:
தக்கலை அருகே மோட்டார் சைக்கிள் மீது கேரள அரசு பஸ் மோதியதில் வாலிபர் இறந்தார். நண்பர் படுகாயம் அடைந்தார்.
பஸ் மோதியது
தக்கலை அருகே உள்ள முளகுமூடு பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவருடைய மகன் அஸ்வின்ராஜா (வயது 25). இவர் டிப்ளமோ படித்துள்ளார். இவரும், இவருடைய நண்பர் செல்லங்கோணத்தை சேர்ந்த பெனின்ஸ் (22) என்பவரும் ஆன்லைன் மூலம் வங்கி கடன் வாங்கி கொடுப்பது உள்பட பல்வேறு பணிகளை செய்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு அஸ்வின்ராஜாவும், பெனின்சும் ஓட்டலில் சாப்பிடுவதற்காக முளகுமூட்டில் இருந்து சாமியார் மடத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை பெனிக்ஸ் ஓட்டினார். அஸ்வின்ராஜா பின்னால் அமர்ந்து பயணம் செய்தார். அவர்கள் காட்டு விளை பகுதியில் செல்லும் போது, எதிரே வந்த கேரள அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
வாலிபர் சாவு
உடனே அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர், அங்கு அஸ்வின் ராஜாவை டாக்டர் பரிசோதனை செய்து பார்த்து விட்டு அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று கூறினார்.
இதில் படுகாயம் அடைந்த பெனின்சுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து அறிந்ததும் தக்கலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அதை தொடர்ந்து கேரள பஸ் டிரைவர் கொச்சியை சேர்ந்த பைஜூ (42) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.