காயல்பட்டினம்-கயத்தாறில்பாப்புலர் பிரண்ட்-ஆப் இந்தியா அமைப்பினர் சாலை மறியல்; 31 பேர் கைது
காயல்பட்டினம்-கயத்தாறில் சாலை மறியலில் ஈடுபட்ட பாப்புலர் பிரண்ட்-ஆப் இந்தியா அமைப்பினர் 31 பேர் கைது செய்யப்பட்டனர்.;
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம், கயத்தாறில் சாலை மறியலில் ஈடுபட்ட பாப்புலர் பிரண்ட்ஆப் இந்தியா அமைப்பினர் 31 பேரை போலீசார் கைது செய்தனர்.
சாலை மறியல்
மாநிலம் முழுவதும் பாப்புலர் பிரண்ட்ஆப் இந்தியா அலுவலகங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தியதை கண்டித்தும், கட்சியின் அகில இந்திய தலைவர், மாநில தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் நேற்று காயல்பட்டினம் புதிய பஸ்நிலையம் முன்பு அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். காயல்பட்டினம் பகுதி தலைவர் அஷ்ரப் அப்துல்லா, மாவட்ட மக்கள் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் அப்துல் ரகுமான் ஆகியோர் தலைமையில் நடந்த மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
18 பேர் கைது
தகவல் அறிந்தவுடன் ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட 18 பேரை கைது செய்து, ஆறுமுகநேரியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது.
கயத்தாறு
இதேபோன்று கயத்தாறில் மதுரை மெயின் ரோட்டில் கழுகுமலை பகுதி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் பகுதி செயலாளர் சேக் முகைதீன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப்பகுதிக்கு விரைந்து சென்ற கயத்தாறு இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் காசிலிங்கம், மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 13 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் மதுரை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது