மண்பானைகளில் பொங்கலிடுவோம் களைகட்டி வரும் பொங்கல் பண்டிகை- இல்லத்தரசிகள் கருத்து
மண்பானைகளில் பொங்கலிடுவோம் களைகட்டி வரும் பொங்கல் பண்டிகை- இல்லத்தரசிகள் கருத்து
தமிழர்களின் திருநாளாம் பொங்கல் திருவிழா வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும்.
அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியை வெல்லம், பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கிக் சூரியனுக்கும் கால்நடைகளுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும். அதனை கொண்டாட தமிழ்நாடு தயாராகிவிட்டது.
பொங்கல் பரிசு
அரசு தரப்பில் ரூ.1000 பரிசும், கரும்புடன் ரேசன் கடைகளில் பொங்கல் தொகுப்பும் வழங்கப்பட்டு வருகிறது.
எங்கும் பச்சரிசி, வெல்லம், கரும்பு, மண் பானைகள், கலர் கோலப்பொடி, புத்தாடைகள் விற்பனை களைகட்டி வருகிறது.
ஈரோடு கொல்லம்பாளையம், நேதாஜிரோடு, சவீதா சிக்னல் பகுதி, பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் போன்ற இடங்களில் மண் பானைகள் விற்பனை மும்முரமாக நடக்கிறது.
மண் பானை விற்பனை
இதுகுறித்து கொல்லம்பாளையத்தில் மண் பானை விற்பனை செய்யும் அன்னகாமு கூறியதாவது:-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண் பானைகள் விற்பனைக்காக வைத்து உள்ளோம். சாதாரண பானைகளும், வண்ணம் தீட்டப்பட்ட பானைகளும் விற்பனை செய்கிறோம். வியாபாரம் சுமாராக இருந்தாலும், பொதுமக்கள் பலர் ஆர்வமாக பானைகளை வாங்க வருகிறார்கள். ஆனால் விலை அதிகமாக இருப்பதாக கூறுகின்றனர். நாங்கள் பானைகளை வாங்குமிடத்திலேயே விலை உயர்ந்துவிட்டது. கடந்த ஆண்டை காட்டிலும் ஒரு பானைக்கு ரூ.50 விலை உயர்ந்து உள்ளது. விலைவாசி உயர்வு காரணமாக பொங்கல் பானையின் விலையும் உயர்ந்து உள்ளது. அதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மானாமதுரை, திருச்சி, திண்டுக்கல் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து மண் பானைகள் விற்பனைக்கு வருகின்றன.
வர்ணம் தீட்டுவதற்கு தேவையான பெயிண்ட் விலை ரூ.200-ல் இருந்து ரூ.300 ஆக உயர்ந்து விட்டது. இதேபோல் கடந்த ஆண்டு ஆட்கள் கூலியாக ரூ.700 கொடுத்தோம். ஆனால் இந்த ஆண்டு ரூ.1,000 கொடுக்க வேண்டியுள்ளது. அதனால் மண் பானையின் விலை உயர்ந்தது. இருந்தாலும் நமது பாரம்பரியத்தை மீட்கும் வகையில் மண் பானையில் பொங்கல் வைத்து பண்டிகையை கொண்டாடவே பொதுமக்கள் விரும்புகிறார்கள். இதனால் பலரும் வந்து மண்பானைகளை வாங்கி செல்கிறார்கள்.
ஆர்.ஜி.சாரதா
ஈரோடு மூலப்பாளையம் கெட்டிநகரை சேர்ந்த இல்லத்தரசி ஆர்.ஜி.சாரதா கூறியதாவது:-
பொங்கல் பண்டிகை என்பது தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஓர் அறுவடை பண்டிகையாகும். இந்த நன்னாளில் உழைக்கும் மக்கள் இயற்கை தெய்வமாக கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் நன்றி கூறும் தினமாக கொண்டாடப்படுகிறது. கிராமங்களில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் தினத்துக்கு முந்தைய நாள் இரவில் வாசலில் பெண்கள் வண்ண கோலமிடுவார்கள். மறுநாள் பொங்கல் வைத்து சாமிக்கு படைப்பதுடன், செங்கரும்பை சுவைப்பதும் உண்டு.
அதுமட்டுமின்றி கிராமங்களில் பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு 2 நாட்கள் விழாக்கோலம் பூண்டு காணப்படும். இத்தகைய சிறப்பு மிக்க விழாவான தமிழர் திருநாளை நாம் அனைவரும் ஒன்று கூடி கொண்டாட வேண்டும். இதுபோன்ற விழாக்கள் நடப்பது நகர்ப்புற மக்களுக்கு தெரிவதில்லை. வீட்டுக்குள்ளே பொங்கல் வைத்து, டி.வி.க்களில் காட்சிபடுத்தப்படும் சில நிகழ்ச்சிகளை பார்த்துவிட்டு, தியேட்டர்களுக்கு சென்று பொழுதை கழிக்கிறார்கள் நகர்ப்புற வாசிகள். நகர்ப்புறங்களில் வசிப்பவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், தங்களது குழந்தைகளை அருகில் உள்ள கிராமங்களுக்கு அழைத்து சென்று விழா கொண்டாடப்படும் விதங்களையும், விழாக்குழுவினரால் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளையும் பார்க்க வைக்கலாம். இது குழந்தைகளுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.
கே.சி.பத்மா
ஈரோடு மரப்பாலம் பகுதியை சேர்ந்த இல்லத்தரசி கே.சி.பத்மா கூறியதாவது:-
பழந்தமிழர்களின் கலை, இலக்கியம், பண்பாட்டுக்கு கட்டியம் கூறும் வகையில் நாம் கொண்டாடும் பண்டிகை, தைத்திருநாளான பொங்கல் பண்டிகை என்றால் மிகையாகாது. நம்மை தாங்கும், காக்கும் பூமி தாய்க்கும், ஒவ்வொரு உயிருக்கும் உரமூட்டும் சூரியனுக்கும் நன்றி கூறும் வகையில் இந்த மண்ணுக்கும், மண் சார்ந்த விளை பொருளுக்கும் இறைவனுக்கு நிகராக வழிபாடு செய்யும் நாளே பொங்கல் பண்டிகையாகும். விறகு அடுப்பில் பொங்கல் வைத்து பசும் பாலை ஊற்றி பொங்கி வரும்போது, அரிசி சேர்த்து, கரும்பு வெல்லம் இட்டு திகட்டாத சர்க்கரை பொங்கலை படைத்தோம் அந்த காலத்தில். ஆனால் இன்றோ கியாஸ் அடுப்பில் குக்கரில் பொங்கல் வைக்கும் காலமாக மாறிவிட்டது.
ஒவ்வொரு பண்டிகையும் நமக்கு உணர்த்தும் பாடம் என்னவென்றால் நாம் ஒன்று கூடி கொண்டாடி மகிழ்வதாகும். ஆனால் இன்றோ பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் திரைப்படங்களை பார்க்க முண்டியடித்து கொண்டு முன்வரிசையில் நிற்கும் இளம் தலைமுறையினரை காணும்போது உள்ளம் தவிக்கிறது. நம் முன்னோர்கள் வகுத்த வழிபாட்டு முறைகளை மெல்ல மெல்ல தவிர்த்து வருகிறோம் என்பதைவிட மறந்து விடுகிறோம் என்பதே உண்மை. இந்த தைத்திருநாளில் நாம், நம் தாத்தா, பாட்டி, தாய், தந்தை, சகோதர, சகோதரிகள், உறவினர்கள் என அனைவரும் புடைசூழ பொங்கல் வைத்து, அதை அனைவரும் சேர்ந்து சாப்பிட வேண்டும். மேலும், அக்கம் பக்கத்தில் உள்ள நண்பர்கள், இயலாதவர்களுக்கு பகிர்ந்து அளித்து பொங்கல் பண்டிகையை கொண்டாட வேண்டும்.
ஈஸ்வரன்
மூலப்பாளையத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஈஸ்வரன் கூறியதாவது:-
பொங்கல் பண்டிகை என்றாலே நாம் ஒன்று சேர்ந்து கொண்டாடும் தமிழர் திருநாளாகும். இந்த பண்டிகையை கிராமப்புறங்களில் இன்றைக்கும் சிறப்பாக கொண்டாடி மகிழ்வதை காணமுடிகிறது. அதிலும் மாட்டு பொங்கலுக்கு என்று தனிச்சிறப்பு உண்டு. விவசாயத்துக்கு பெரும் உதவியாக இருக்கும் மாடுகளுக்கு கொம்பு சீவி, குளிப்பாட்டி, பொட்டு வைத்து பொங்கலிட்டு கொண்டாடி மகிழ்வது.
ஜல்லிக்கட்டுக்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் அளித்து போராட்டம் நடத்தி மீட்டெடுத்தோம். எனவே இன்றைய தலைமுறையினருக்கும் பண்பாடு, கலாசாரம் தொடர்பாக ஆர்வம் மிகுதியாக இருப்பதை உணர முடிகிறது. ஆனால் செல்போன்களின் பயன்பாடு, திரைப்படம் பார்ப்பது போன்ற மோகத்தால் இளம் தலைமுறையினர் தவறான வழிக்கு சென்று விடுவார்களோ என்ற பயம் அனைவரிடமும் உள்ளது. இதை தவிர்க்க பெற்றோர்களும் தங்களது குழந்தைகளுக்கு பாரம்பரியம் தொடர்பாக கற்றுக்கொடுக்க வேண்டும். நமது வழிபாட்டு முறைகளை பெற்றோர்களே மாற்றி விடுகிறார்கள். இந்த நிலை தொடர்ந்தால் வருகிற தலைமுறையினருக்கு வழிபாட்டு முறைகளே மறந்துவிடும். எனவே மண் பானையில் பொங்கல் வைத்து, சூரிய பகவானுக்கு படைக்க வேண்டும்.
ரதீஸ் ஆறுமுகம்
பெரியசடையம்பாளையத்தை சேர்ந்த கால் டாக்சி டிரைவர் ரதீஸ் ஆறுமுகம் கூறியதாவது:-
எனது சொந்த ஊர் தென்காசி மாவட்டம் குற்றாலம். அந்த பகுதிகளில் பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படும். ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பே வீடுகளை சுத்தம் செய்து வெள்ளை அடிப்பார்கள். அன்று முதல் அசைவ உணவு சாப்பிடுவதை தவிர்ப்பார்கள். பொங்கல் தினத்தன்று அதிகாலையிலேயே சூரிய உதயத்துக்கு முன்பு வீட்டு வாசலில் பொங்கல் இடுவார்கள். அப்போது கிழக்கு திசையில்தான் பொங்கல் பொங்கும் வகையில் பானையை வைத்து பொங்கல் வைக்கப்படும். மேலும், செங்கரும்பு, காய்கறிகள், பனங்கிழங்கு உள்ளிட்ட விளை பொருட்களை வாழை இலையில் அடுக்கி வைத்து சூரிய பகவானுக்கு படைக்கப்படும்.
நகர்புறங்களில் கியாஸ் அடுப்பில் வீட்டுக்குள் பொங்கல் வைக்கிறார்கள். ஆனால் எங்கள் வீட்டில் ஆண்டுதோறும் மண் பானையில்தான் பொங்கல் வைப்போம். அதற்காக புதிய மண் பானையை வாங்கி செல்கிறேன். அதிலும் மக்களை கவரும் வகையில் வண்ண மண் பானைகள் விற்பனைக்கு உள்ளது. விலை அதிகமாக இருந்தாலும், நாம் அடிக்கடி மண்பானையை வாங்குவதில்லை. இந்த பானையை சில ஆண்டுகளுக்கு பயன்படுத்தலாம். எனவே மண் பானை உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் வகையில் மண் பானையை அனைவரும் வாங்கி, அதில் பொங்கல் வைத்து கொண்டாட வேண்டும். மண்பானையில் உணவு சமைத்து சாப்பிட்டால் உடல் நலனும் மேம்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.