கரூர் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நாளை முதல் தொடர் உண்ணாவிரதம்
கரூர் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நாளை முதல் தொடர் உண்ணாவிரதம் நடத்தப்படும் என்று ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருச்சி, மே.29-
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் மணிமேகலை தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் மயில் முன்னிலை வகித்தார். திருச்சி மாவட்ட செயலாளர் ஆரோக்கியராஜ் வரவேற்றார். மாநில பொருளாளர் மத்தேயு, துணை பொதுச்செயலாளர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கடவூர் ஒன்றியத்தைச் சேர்ந்த ஆசிரியரை பணி நீக்கம் செய்ததை கண்டித்து போராட்டம் நடத்திய சங்கப்பொறுப்பாளர்களான 3 இடைநிலை ஆசிரியர்களை விதிகளுக்குப் புறம்பாக வேறு ஒன்றியங்களுக்கு பணி மாறுதல் செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஆகவே சங்கப் பொறுப்பாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். கரூர் மாவட்ட கல்வித் துறையின் விதிமீறல்கள் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகளை கண்டித்தும், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் பள்ளிகளில் பணிபுரிய அனுமதிக்கக்கோரியும் நாளை (திங்கட்கிழமை) முதல் கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.